×

உலா வரும் போலிகள்!: ஃபாஸ்டேக் ஸ்டிக்‍கர்களை ஆன்லைனில் வாங்கும் போது கவனம் தேவை...தேசிய நெடுஞ்சாலை துறை எச்சரிக்கை..!!

சென்னை: இணையதளங்களில் போலி ஃபாஸ்டேக் ஸ்டிக்‍கர்கள் உலா வருவதாகவும் ஃபாஸ்டேக் ஸ்டிக்‍கர்களை ஆன்லைன் மூலம் வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலமாக சாலை பயன்பாட்டு கட்டணம் செலுத்தும் நடைமுறை கடந்த மாதம் 16ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் ஃபாஸ்டேக் மூலமாக கட்டணம் செலுத்தும் சதவீதம் வெகுவாக அதிகரித்துள்ளது.

சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலமாக 87 சதவீதம் அளவுக்கு வாகன ஓட்டிகள் பணம் செலுத்துவதாக தரவுகள் வெளியாகின. இந்நிலையில் போலி ஃபாஸ்டேக் ஸ்டிக்‍கர்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபாஸ்டேக் வாங்குவோர் குறிப்பிட்ட வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்கள் மை ஃபாஸ்டேக் செயலி அல்லது ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் மட்டுமே ஃபாஸ்டேக் ஸ்டிக்‍கர்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, கடவு சீட்டு, பான் கார்டு போன்றவற்றில் ஏதாவது ஒன்றுடன் வாகனத்தின் பதிவுச்சான்றை பதிவேற்றம் செய்து  ஃபாஸ்டேக்‍-ஐ பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் போலியான ஃபாஸ்டேக்குகள் வழங்கும் இணையதளம் குறித்து நெடுஞ்சாலை ஆணையத்தின் உதவி மையத்தில் புகார் செய்யலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : National Highway Department , FastTake Sticker, Online, National Highway Department
× RELATED சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை கோரிய...