×

பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் குறித்து விவாதம் நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கை : மத்திய அரசு அனுமதி மறுப்பு!!

டெல்லி : பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வலியறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு காலை தொடங்கியதும் புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பின்னர் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து பேசிய மாநிலங்களவைத் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாநிலங்களவையில் அவர் பேசியதாவது,எரிபொருட்கள் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே விதி எண் 267 ஐ பயன்படுத்தி அவை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, பெட்ரோல் -டீசல் எரிவாயு விலையேற்றம் குறித்து விவாதம் நடத்த வேண்டும்.எரிபொருள் விலையேற்றத்திற்கு என்ன காரணத்தை அரசு கூறுகிறது என்று பாப்போம், என்றார்.ஆனால் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி தரவில்லை.

இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. குழப்பத்திற்கு இடையே கேள்வி நேரத்தை நடத்த முயன்ற முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து மாநிலங்களவையை 11 மணி வரை ஒத்திவைக்க நேரிட்டது. பின்னர் அவை கூடிய போதும் எரிபொருள் விலையேற்றம் குறித்து விவாதம் அனுமதி தரக் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டபடி இருந்ததால் அவையில் குழப்பம் நீடித்தது. இதனையடுத்து அவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  


Tags : Federal government , பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...