×

மகளிர் மேம்பாட்டிற்கு தொடக்கமே ரூ.1000.. ஆண்களுக்கு பெண்கள் அடிமை இல்லை.. : மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் உள்ளிட்டோர் மகளிர் தின வாழ்த்து!!

சென்னை : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக் கூறி வருகிறார்கள். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, மகளிர் தின வாழ்த்துச் செய்தியின் விவரம் பின்வருமாறு:

முகநூல் பதிவு:

உலக மகளிர் நாள் - மார்ச் 8!

தாயாக - மனைவியாக - சகோதரியாக - மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்!

பெண்களின் உரிமைகள் கவனத்துடன் எப்போதும் பாதுகாக்கப்படுவதற்கும்,  அவர்கள் தற்சார்புடன் கூடிய தகுதி மிக்க முன்னேற்றம் அடைவதற்கும் குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சமபங்கு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழு, காவல்துறையில் பெண்கள் நியமனம் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்தியது தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு.  

கழக ஆட்சி மலர்ந்ததும் அனைத்துக் குடும்பத் தலைவியருக்கும் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும். எதிர்வரும் காலத்திலும் உரிமைத்தொகை உள்ளிட்ட பெண்களுக்கான பலவகைத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்.  

சமுதாயத்தில் சரிபாதியளவில் உள்ள பெண்ணினத்தைப் பலபடப் பாராட்டிப் பெருமைப் படுத்தியிருக்கிறது தமிழ் இனத்தின் நிரந்தரத்துவம் பெற்ற இலக்கியங்கள். அத்தகைய பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் நாளாம் இன்று இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!

திருமாவளவன்

இதேபோல் விசிக தலைவரும் எம்.பியுமான திருமாவளவன், “மார்ச்-08_அனைத்துலக மகளிர் நாள்: மகளிர் உரிமையைப் பாதுகாக்க தேர்தல் களத்தில் சனாதன சக்திகளை வீழ்த்துவோம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சூளுரை! ” என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்

அதே போல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாயத்தில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள் தாயாக, தாரமாக, சகோதரிகளாக இருந்து தொண்டுக்கு இலக்கணமாக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆண்களுக்கு பெண்கள் அடிமை இல்லை ,பெண்களுக்கு ஆண்கள் அடிமை இல்லை. இருபாலரும் ஒருசேர நட்புணர்வோடு புரிதல்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னோர்கள் காட்டிய வழியாகும். ஆண் பெண் உறவு நட்பின் அடிப்படையில் அமைகிறது. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை இன்றைய காலகட்டத்தில் இருபாலரும் ஒருசேர சமாளிக்க வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.

Tags : MK Stalin ,Vijayakanth ,Happy ,Women's Day , மு.க.ஸ்டாலின்
× RELATED தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த்...