×

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் குற்றப்பின்னணி உள்ள 828 ரவுடிகளை போலீசார் கண்காணிப்பு: தேர்தல் விதி மீறியதாக 14 வழக்குகள் பதிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் குறித்து பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை முழுவதும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 828 ரவுடிகள் அந்தந்த துணை கமிஷனர்கள் முன்னிலையில் நன்னடத்தை சான்றில் கையெழுத்து போட்டுள்ளனர். அவர்கள் தினமும் காவல் நிலையங்களில் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகிறார்களா என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

அப்படி கையெழுத்து போடாத ரவுடிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் 828 ரவுடிகளையும் கண்காணித்து வருகின்றனர். மேலும், சென்னை மாநகரில் போலீசாரின் அனுமதியுடன் 2600 துப்பாக்கிகள் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் வைத்துள்ளனர். தேர்தலை கருத்தில் கொண்டு அனைவரும் காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று மாநகர காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி நேற்று வரை 1,327 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மிதமுள்ள 1,273 துப்பாக்கிகளை ஒப்படைக்காத உரிமையாளர்களுக்கு உடனே தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும், கடந்த ஒரு வாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக மாநகரம் முழுவதும் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பெருக்கி வைக்க கூடாது என்று போலீசார் அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Chennai , Police monitor 828 rowdies with criminal background in Chennai ahead of Assembly polls: 14 cases registered for violating election rules
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...