கப்தில் அதிரடியில் ஆஸி. சரண்டர் டி20 தொடரை வென்றது நியூசிலாந்து

வெலிங்டன்: ஆஸ்திரேலிய அணியுடனான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஸ்கை ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 36 ரன், மேத்யூ வேடு 44 ரன், ஸ்டாய்னிஸ் 26, மிட்செல் மார்ஷ் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். கேன் ரிச்சர்ட்சன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் சோதி 3, சவுத்தீ, போல்ட் தலா 2, சாப்மேன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 15.3 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்து எளிதாக வென்றது. டிவோன் கான்வே - மார்டின் கப்தில் தொடக்க ஜோடி 11.5 ஓவரில் 106 ரன் சேர்த்தது ஆஸி. அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. கான்வே 36 ரன் (28 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), கப்தில் 71 ரன் (46 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் கேன் வில்லியம்சன் (0) விக்கெட்டை பறிகொடுத்தனர். கிளென் பிலிப்ஸ் 34 ரன் (16 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) சாப்மேன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியால் நியூசிலாந்து 3-2 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்தின் கப்தில் ஆட்ட நாயகன் விருதும், ஈஷ் சோதி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Related Stories:

>