விஜய் ஹசாரே டிராபி காலிறுதியில் டெல்லி

புதுடெல்லி: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் பிளே ஆப் போட்டியில், உத்தரகாண்ட் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற டெல்லி அணி கால் இறுதிக்கு முன்னேறியது. டெல்லி, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. உத்தரகாண்ட் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது. தொடக்க வீரர் கமல் சிங் அதிகபட்சமாக 77 ரன் (83 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். ஜெய் பிஸ்டா 31, கேப்டன் குணால் சாண்டிலா 62 ரன் (83 பந்து, 6 பவுண்டரி), திக்‌ஷான்ஷு 20, வைபவ் பட் 29, சவுரவ் ராவத் 44 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். டெல்லி பந்துவீச்சில் பிரதீப் சங்வான் 3, லலித் யாதவ், நிதிஷ் ராணா தலா 2, ஷிவாங்க் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 50 ஓவரில் 288 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்து வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. ராணா 81 ரன் (88 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), அனுஜ் ராவத் 95* ரன் (85 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் சங்வான் 58* ரன் (49 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். கால் இறுதி சுற்று இன்று தொடங்குகிறது. முதல் கால் இறுதியில் குஜராத் - ஆந்திரா அணிகளும், 2வது கால் இறுதியில் கர்நாடகா - கேரளா அணிகளும் மோதுகின்றன. நாளை நடக்கும் 3வது கால் இறுதியில் உத்தர பிரதேசம் - டெல்லி அணிகளும், 4வது கால் இறுதியில் மும்பை - சவுராஷ்டிரா அணிகளும் சந்திக்கின்றன. அரை இறுதி ஆட்டங்கள் மார்ச் 11ம் தேதியும், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி 14ம் தேதியும் நடக்க உள்ளன.

Related Stories:

>