தேமுதிக, தமாகா தொகுதி பங்கீட்டில் இழுபறி ஓபிஎஸ்-இபிஎஸ் 2 மணி நேரம் தீவிர ஆலோசனை: இன்று 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு

சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் 2 மணி நேரம் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். இதன்படி இன்று 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, பாஜ கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக மற்றும் தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி ேபச்சுவார்த்தை இழுபறி நிலையில் உள்ளது. இந்நிலையில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமை வெளியிட்டது. இந்நிலையில் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் தொடர்பாக அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர். காலை 10.50 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் 2 மணிநேரம் நடந்தது.

இதில் தேமுதிக மற்றும் தமாகாவிற்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும், வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது :

கூட்டணியில் உள்ள ேதமுதிக 20 தொகுதிகள் வரை கேட்கிறது. ஆனால் அதிமுக தலைமை 10 தொகுதிகளை மட்டும் அளிக்க தயாராக இல்லை. இதைப்போன்று தமாகா 12 தொகுதிகள் வரை கேட்டுள்ளது. ஆனால் 3 தொகுதிகளை மட்டுமே அளிக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. மேலும் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக பாஜ அதிமுக வலிமையாக உள்ள தொகுதிகளை கேட்டுள்ளது. இதைப்போன்று பாமக அளித்துள்ள தொகுதி பட்டியல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை முடிவில் இன்று அல்லது 10ம் தேதி 2வது கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>