நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் தொடர் இன்று துவங்குகிறது: ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கும்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்க உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 29ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜனாதிபதி உரையை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், விவசாயிகள் போராட்டம் காரணமாக, எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்ததால் தொடர்ந்து 4 நாட்கள் அவைகள் முடங்கின. பின்னர், வேளாண் சட்டங்கள் தொடர்பாக தனி விவாதத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு, பல நாட்கள் அவை நள்ளிரவு வரை நடந்தது.

இரு அவையிலும் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். மாநிலங்களவையின் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 12ம் தேதியும், மக்களவையில் கடந்த 15ம் தேதியும் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்க உள்ள இக்கூட்டத் தொடரில் ஓயவூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய திருத்த மசோதா, நிதி கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி மசோதா, மின் திருத்த மசோதா, கிரிப்டோ கரன்சி மற்றுமு் டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்துதல் மசோதா போன்ற நிதி மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, மாநிலங்களவை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடக்கும்.

* முன்கூட்டியே முடிய வாய்ப்பு

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை நடக்க இருப்பதால், 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் 2 வாரங்களில் அதாவது இம்மாத இறுதியில் முன்கூட்டியே முடிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

* தடுப்பூசி முகாம்

நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிகளுக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு வரும் எம்பி.க்கள் அவர்கள் விரும்பும் பட்சத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

>