×

வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லி எல்லையில் விவசாயி தற்கொலை: உயிரை மாய்த்தவர்கள் 200ஐ கடந்தனர்

சண்டிகர்: வேளாண் சட்டங்களைக் கண்டித்து அரியானாவைச் சேர்ந்த விவசாயி நேற்று தற்கொலை செய்து கொண்டார். டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இதுவரையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். இந்நிலையில், போராட்டம் நடக்கும் டெல்லி எல்லை பகுதிகளில் ஒன்றான திக்ரியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், உயிரிழந்தவர் அரியானா மாநிலத்தின் ஹிசர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்பீர் (49) என்பது தெரிய வந்தது. ‘என்னுடைய இந்த முடிவுக்கு வேளாண் சட்டங்களே காரணம். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே என்னுடைய கடைசி ஆசை. என்னுடைய கடைசி ஆசையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

* போராட்டம் தொடரும்
விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த், டிராக்டர்கள் பேரணியை தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், ‘‘இந்த டிராக்டர்கள் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டின் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி சென்ற பிறகு, போராட்டம் நடைபெறும் காஜிப்பூரை மார்ச் 27ம் தேதி வந்தடையும். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்,’’ என்றார். 


Tags : Delhi border , Farmer commits suicide at Delhi border in condemnation of agricultural laws: More than 200 killed
× RELATED டெல்லியில் விவசாயிகளின் பேரணி...