×

தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் தடுப்பூசி சான்றிதழில் இருந்து மோடி படத்தை நீக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: தேர்தல் விதிமுறை மீறல் என்பதால், கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடி படத்தை மத்திய அரசு நீக்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்க்குகளில் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தது. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடக்கும் 5 மாநிலத்திலும் பெட்ரோல் பங்க்குகளில் உள்ள பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழிலும் பிரதமர் மோடி புகைப்படம் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் சமீபத்தில் புகார் தரப்பட்டது. அரசு இயந்திரங்களை மத்திய அரசு தவறாக பயன்படுத்திக் கொள்வதாக அக்கட்சி குற்றம்சாட்டி இருந்தது. இந்த புகாரை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம் பெற்றுள்ள பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கும்படி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டது. கொரோனா சான்றிதழில் பிரதமர் புகைப்படம் இடம் பெறுவது தேர்தல் விதிமுறை அமலுக்கு வரும் முன்பே திட்டமிட்டதாக கூறியிருக்கும் சுகாதார அமைச்சகம், 5 மாநிலங்களில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மட்டும் பிரிக்கப்பட்டு, அவற்றில் பிரதமர் புகைப்படத்தை மறைத்து வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச எரிசக்தி விருது பெற்றார் மோடி
நடப்பு ஆண்டுக்கான செராவீக் சர்வதேச எரிசக்தி மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், ‘செராவீக் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது’ என்ற விருது மோடிக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய மோடி, ‘‘இந்த விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களுமே, உலகிற்கு பெரிய சவால்களாக உள்ளன. கொள்கைகள் மற்றும் சட்டங்கள் வாயிலாக, இவற்றை எதிர்கொள்ள வேண்டும். பருவநிலைக்கு எதிராக நாம் போராட நம் பழக்க வழக்கத்தில் இருந்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும்,’’ என்றார்.

Tags : Modi ,Election Commission , Because the election rule is violated From the vaccination certificate Modi image to be removed: Election Commission orders action
× RELATED ரெய்டு நடத்தி எனது பிரசாரத்தை...