காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் பகுதியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 2 பேர் கைது

சென்னை: காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரத்தில் போலி மதுபான தொழிற்சாலை இயங்குவதாக சென்னை மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்பி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு எஸ்பி மணி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அவர்களது உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மதுவிலக்குத் தடுப்பு வேட்டை நடந்தது. இதையொட்டி, காஞ்சி மாவட்ட மதுவிலக்குப் பிரிவினரும், தமிழக அமலாக்கத் துறையின் அங்கமான மத்திய புலனாய்வுப் பிரிவினரும் காஞ்சிபுரத்தை அடுத்த திம்மசமுத்திரத்தில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பது தெரிந்தது. உடனே போலீசார், அதிரடியாக அங்கு சென்று சோதனையிட்டனர்.

அங்கு, எரி சாராயம், போலி மதுபானம் தயாரிக்க பயன்படும் உபகரணங்கள், போலி முப்பரிமாண முத்திரைகள், உணவு நிறமிகள், ஜெராக்ஸ் மெஷினில் பிரின்ட் எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து அங்கிருந்து 105 லிட்டர் எரி சாராயம், ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரூ.14,11,200 பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடர்பாக அங்கிருந்த அரக்கோணத்தை சேர்ந்த துளசி (41), சித்திரைமேடு பகுதியை சேர்ந்த கலையரசன் (40) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: