×

அதிமுக - தேமுதிக இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை: பாமகவுக்கு இணையாக சீட் கேட்டு பிடிவாதம் பிடிப்பதால், நேற்று மாலை அதிமுக - தேமுதிக இடையே நட்சத்திர ஓட்டலில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கூட்டணியில் நீடிக்குமா, இல்லை தேமுதிக தனியாக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேமுதிகவுடன் அதிமுக அமைச்சர்கள் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. தேமுதிகவுக்கு 10 முதல் 12 இடங்கள் மட்டுமே தருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. இதற்கு தேமுதிக ஒத்துக்கொள்ளவில்லை. பாமகவுக்கு இணையாக 20 முதல் 23 தொகுதியும், ஒரு மாநிலங்களவை எம்பி பதவி, தேர்தல் செலவுக்கு பெரிய தொகையும் தர வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு அதிமுக தலைவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.  தற்போது 15 தொகுதிகள் வரை தர அதிமுக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னை, எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அதிமுக - தேமுதிக தலைவர்கள் இடையே 4வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக சார்பில் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், அக்பரும் கலந்து கொண்டனர். ஆனாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றே கூறப்படுகிறது. தேமுதிக தொடர்ந்து பிடிவாத போக்கை கடைபிடித்து வருவதாகவே கூறப்படுகிறது. அதிமுக சார்பிலும் தங்களது முதல் நிலையை விட்டு கீழே இறங்கி வந்து, 15 இடங்கள் வரை தர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தேமுதிக ஏற்றுக்கொள்ளுமா அல்லது கூட்டணியை விட்டு வெளியேறி தனியாக போட்டியிடுமா என்பது குறித்து இன்று அல்லது நாளை தெரியவரும்.

Tags : Depreuka , Between AIADMK - Temujin Negotiations again failed
× RELATED அடுத்தடுத்து நடைபெற உள்ள...