×

நாலா பக்கம்: புதுவை; கேரளா; மேற்கு வங்கம்; அசாம்

* அதிகாரியே விதி மீறலாமா... டென்ஷனில் தேர்தல் துறை
புதுச்சேரியில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. அரசு பணியாளர்கள் எந்த விதி மீறலிலும் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் கூறியுள்ளது. இதனிடையே, புதுச்சேரியில் அடகு கடைகளில் நடந்த நூதன மோசடிகள் தொடர்பாக, சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்பி பிரதிக்‌ஷா கொடாரா கடந்த 2ம் தேதி பேட்டி கொடுத்தார். அப்போது, சட்டசபை தேர்தலுக்காக கடந்த 4 மாதங்களில் எடுக்கப்பட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி அவர் தெரிவித்தார். இதை கேள்விப்பட்டு டென்ஷனான மாநில தேர்தல் துறை, ‘அதிகாரியே இப்படி விதியை மீறலாமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அனுமதி பெறாமல் பேட்டி அளித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில தேர்தல் துறையானது சீனியர் எஸ்பி.க்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது தற்போது பரபரப்பு ஆகியுள்ளது.

* 8 அமைச்சர்களுக்கு மார்க்சிஸ்ட் கல்தா
கேரளா தேர்தல் களம் வெகு வேகமாக சூடு பிடித்துள்ளது. சூடு என்றால் இது வேறு மாதிரியான சூடு. கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர்கள், பெண்கள், புதுமுகங்களுக்கு 50 சதவீதத்துக்கு அதிகமாக வாய்ப்பு தர உள்ளதாகவும், பலமுறை போட்டியிட்டு வென்றவர்கள், 2 முறை தோற்றவர்களுக்கு சீட் கிடையாது என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலோட்டமாக இந்த பேச்சு எழுந்தாலும் எழுந்தது, இதே பாணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் `லபக்’ என்று பிடித்து கொண்டுள்ளது. இதையடுத்து, 3 முறை போட்டியிட்டவர்கள், 2 முறை அல்லது அதற்கு மேல் களமிறங்கி வெற்றி பெற்றவர்களுக்கு `சீட்’ தரப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளது அக்கட்சி. இதன் அடிப்படையில், கட்சியை சேர்ந்த 8 அமைச்சர்களுக்கே கல்தா கொடுக்க முடிவு செய்துள்ளதாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

* போர்க்களத்தில் சந்திக்கலாம் மம்தாவுக்கு சுவேந்து சவால்
‘வேண்டும்’ என்றால் தலை மீது வைத்து கொண்டாடுவதும், ‘வேண்டாம்’ என்றால் கீழே போட்டு மிதிப்பதும் அரசியலில் சகஜம். தன்னை வளர்த்து விட்ட தலைவர்களின் மார்பில் பாயும் ஆடுகளும் அதிகம். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும், திரிணாமுல் காங்கிரசின் பலம் வாய்ந்த தலைவராகவும் இருந்தவர்தான் சுவேந்து அதிகாரி. சில மாதங்களுக்கு முன் பாஜ.வுக்கு தாவி விட்ட இவர்தான். இப்போது மம்தாவின் ‘நம்பர் ஒன்’ எதிரியாக இருக்கிறார். இத்தேர்தலில் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக மம்தா அறிவித்துள்ளார். அவரை எதிர்த்து பாஜ.வின் வேட்பாளராக சுவேந்து நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது. நந்திகிராமில் போட்டியிடும் மம்தாவை நக்கலாக வரவேற்றுள்ள இவர், ‘மாண்புமிகு முதல்வர் அவர்களே வருக... வெளியாட்களுக்கு இங்கு வேலை இல்லை. நானே, இந்த மாவட்டத்தின் மைந்தன். போர் களத்தில் சந்திப்போம்... யார் இந்த மண்ணின் மைந்தர் என்பது, தேர்தல் முடிவு வெளியாகும் மே 2ம் தேதி தெரியும்...’ என்று சவால் விட்டுள்ளார்.

* இரட்டை தலைமையால் வந்த இரட்டை தலைவலி
அசாமில் முதல்வர் சர்பானந்த சோனாவால் தான். ஆனால், அவரையும் பல சந்தர்ப்பங்களில் ஓவர் டேக் செய்து வருகிறார் நிதி அமைச்சரான ஹிமாந்த் பிஸ்வா சர்மா. இன்னும் சொல்லப் போனால், மாநிலத் தலைவரான ரஞ்சித் குமார் தாசின் பெயர் கூட பலருக்குத் தெரியாது. ஆனால், ஹிமாந்த் பிஸ்வாவைத் தெரியாதவர்களே இருக்க முடியாது என்ற நிலைமைதான் அசாமில் இப்போது உள்ளது. ஒருபக்கம் முதல்வர், மற்றோர் பக்கம் நிதி அமைச்சர் என்ற இரட்டைத் தலைமையால் ஏற்கனவே அமைச்சர்களும், அதிகாரிகளும் மண்டையை உடைத்துக் கொண்டு வருகிறார்கள். தேர்தல் நெருங்குவதால் இந்த குழப்பம் தற்போது மக்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது. ‘இரட்டைத் தலைமை விவகாரம் இந்த தேர்தலில் பாஜ.வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாக இருக்கும்’ என்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள். இதற்கு பதிலளிக்கும் பாஜ தரப்பு, ‘எங்களுக்குள் எந்த சர்ச்சையும் இல்லை. கோஷ்டி மோதலுக்குப் பெயர் வாங்கியதே காங்கிரஸ்தான்’ என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

* துட்டுக்கு சீட்டு... மந்திரியோட கலெக்‌ஷன் டைம்
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொடங்கி திருப்பத்தூர் வரை நீண்டிருந்தது. அப்போது, அதிமுகவுல கிழக்கு, மேற்கு 2 மாவட்ட செயலாளருங்க இருந்தாங்க. அப்போதே, உள்ளூர் மந்திரியோட ஆதிக்கம், மாவட்டம் முழுவதும் அதிகமாக இருந்துச்சாம். இதற்கிடையில மாவட்டத்தை 3 ஆக பிரிச்சாங்க. அதன்பிறகு கட்சியில எக்ஸ்ட்ராவா 2 மாவட்ட செயலாளருங்கள நியமிச்சாங்க. அதன் பின்னாடியும், மந்திரியின் தந்திரங்கள் குறையலையாம். இப்ப எலக்‌ஷன் வந்திருக்கிறதால, இது மந்திரியோட கலெக்‌ஷன் டைமாம். அதாவது ஒருங்கிணைந்த மாவட்டத்துல, புதுசா கட்சியில சேர்ந்து துட்டு கொடுக்கிறவங்களுக்கெல்லாம் சாதி ரீதியா, சீட்டு ஒதுக்க ரெகமெண்ட் செய்றாராம். இதனால, கட்சியில இருக்கிற சீனியருங்க ரொம்பவே அப்செட்ல இருக்காங்களாம். அதோட, ஏரியால இருக்கிற இன்னொரு மந்திரியையும், தலைதூக்க விடாம அடக்கி வெச்சிருக்காராம். கிட்டதட்ட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு இந்த மந்திரிதான், முதல்மந்திரியாகவே செயல்படுறாராம். இது இலை கட்சிக்கு வந்த சோதனைடான்னு, அந்த கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க.

Tags : Nala ,Kerala ,West Bengal ,Assam , Nala Page: New; Kerala; West Bengal; Assam
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் செய்வதை...