×

2014-2020 வரை நிர்வாகத்தின் தலைமை தம்மை முன்னிறுத்தி கொள்ள விளம்பரங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து சரிவை சந்தித்த கோ-ஆப்டெக்ஸ்: கு.பாரதி தலைவர் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம், மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935ம் ஆண்டு கைத்தறி நெசவாளர்கள் நெய்த ஆடைகளை சந்தைப்படுத்த உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் என்று ஆரம்பிக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், ஆரம்ப கால கட்டத்தில் கிராமபுறங்களில் சொசைட்டி என்று அழைக்கப்பட்டது. ஏழை, எளிய மக்கள் அதிகமாக விரும்பும் நிறுவனமாக இருந்தது. ஜனதா வேட்டி சேலை, கைலிகள் குறைந்த விலையில் லாப நோக்கம் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அரசு மானியமும் வழங்கி வந்தது. திமுக ஆட்சியில் தான் கைத்தறி தொழிலை மேம்படுத்த 10% மானியம் வழங்கப்பட்டது.

அதன்பிறகு அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வட்டியில்லா 10 மாத தவணையில் துணிகளை எடுத்து கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியது. இன்றளவும் இந்த திட்டம் நடைமுறையில் இருந்தாலும் அரசு ஊழியர்களில் ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் நாடி வருவதில்லை. 1983ம் ஆண்டு வேட்டி, சேலைகள் கைத்தறி நெசவாளர் சங்கத்தில் தேங்கிய போது அப்போதைய அதிமுக அரசு ரேஷன் அட்டைதார்கள் அனைவருக்கும் இலவசமாக துணிகள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இன்றளவும் இந்த திட்டம் இருந்தாலும் கைத்தறி என்ற நிலை விசைத்தறிக்கு சென்று விட்டது. இதனால் தரமான சேலை வேட்டிகள் பயனாளிகளுக்கு கிடைப்பதில்லை. திட்டத்தில் நூல் வாங்குவதிலிருந்து பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்றது.

படிப்படியாக அசுர வளர்ச்சி கண்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் 20 மண்டல அலுவலகம் 500 விற்பனை நிலையங்கள் சுமார் 1000 கோடி வர்த்தகம் (இலவச வேட்டி சேலைகளுக்கு நூல் வழங்குவது உட்பட) கண்டது. 3000 ஊழியர்கள் பணிபுரிந்தனர். 1991-96ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இலவச வேட்டி சேலை கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்தது. ஒவ்வொரு வருடமாக நஷ்டம் அதிகரித்து சுமார் 84 கோடி ஒட்டுமொத்த நட்டமாக உருவாகியது. 2005ம் ஆண்டு 640 ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனர்.

தற்போது 550 ஊழியர்கள் 11 மண்டல அலுவலகம் 160 விற்பனை நிலையங்கள் மட்டுமே உள்ளது. ஒரு சில தருணங்களில் சிறப்பான ஐஏஎஸ் அதிகாரிகள் நிறுவனத்தை அக்கறையோடு வழிநடத்தி சென்றனர். நட்டத்தில் இயங்கிய நிறுவனம் ரூ.84 கோடி ஒட்டு மொத்த நட்டத்தை சரி செய்து லாபத்தில் இயங்க தொடங்கியது. கடந்த 2014-2020 வரை நிர்வாகத்தின் தலைமை தம்மை முன்னிறுத்தி கொள்ள விளம்பரங்கள் கோடி கணக்கில் செலவிடப்பட்டது. நிறுவனம் மீண்டும் சரிவை சந்திக்க தொடங்கியது.

விற்பனை நிலையங்களை புதிதாக திறப்பது அதனை நவீன படுத்துவது பிறகு மூடுவது என்று இழப்பை ஏற்படுத்தியது. பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு வழங்க வேண்டிய பணப் பயன்கள் வழங்கப்படவில்லை. ஊழியர்கள் சிலர் மாரடைப்பில் மாண்டனர். இன்னும் சிலர் ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2018ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப் பட்டது. ஊழியர்கள் சங்கத்தை அழைத்து ஒப்பந்தம் போடாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டது.

கடந்த 2009, 2014ம் ஆண்டு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படி நகர ஈட்டுப்படி மறுக்கப்பட்டது. ஊதிய உயர்வு நடைமுறைபடுத்தபட்டாலும் இதுவரை நிலுவை தொகைகள் வழங்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. பல பத்தாண்டுகளாக நூற்றுக்கணக்கான தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை நிரந்தரப்படுத்த சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்தாலும் நிர்வாகமும் இசைவு தந்தாலும் அரசு ஒப்புதல் தர மறுக்கிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை காலங்களில் 30% தள்ளுபடி வழங்கினாலும் அரசு அதிக பட்சமாக பட்டு ரகங்களுக்கு ரூ.300ம் பருத்தி ரகங்களுக்கு ரூ.150 மட்டுமே அதிகபட்சமாக வழங்குகிறது. மற்ற காலங்களில் ரூ.200, ரூ.100 மட்டுமே வழங்குகிறது. அந்த தொகையும் உரிய காலத்திறக்குள் வழங்காததால் வங்கிகளுக்கு வட்டி கட்ட வேண்டியுள்ளது. இதுவும் இழப்பை சந்திக்க ஒரு காரணம் ஆகும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பரப்புரையில் பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர்கள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ.500க்கு வேண்டிய துணிகளை எடுத்து கொள்ளலாம் என்று அறிவித்ததை நடைமுறை படுத்தியிருந்தால் நெசவாளர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன் அடைந்திருப்பார்கள்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை மேம்படுத்த இலவச வேட்டி சேலைகளுக்கு உண்டான நூல்களை பழைய அடிப்படையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலமாக வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். அரசு மூலதனத்தை ரூ.100 கோடியாக அதிகரிக்க வேண்டும். தள்ளுபடி மானியம் உச்சவரம்பின்றி வழங்க வேண்டும். அரசு நிறுவனங்கனங்களு தேவையான துணிகளை காதி மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் மூலமாக மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும். வங்கிகளில் பெறும் கடன்களுக்கு வட்டி மானியம் வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்கள், நெசவாளர் சங்க பணியாளர்கள்  மரணமடைந்தால் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பணி ஓய்விற்கு பிறகு மாத ஓய்வூதியம் ரூ.10,000 வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் அரசு துறைசார்ந்த ஊழியர்கள் கைத்தறி மற்றும் காதியில் தேவையான துணிகளை வாங்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். கைத்தறி காதியில் துணிகள் வாங்கினால் வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். இதற்கெல்லாம்  மேலாக கைத்தறி ஜவுளிகளுக்கு சரக்கு சேவை வரியிலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும். 1991-96ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இலவச வேட்டி சேலை கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்தது. ஒவ்வொரு வருடமாக நஷ்டம் அதிகரித்து சுமார் 84 கோடி ஒட்டுமொத்த நட்டமாக உருவாகியது.

Tags : Co-optex ,Union ,Madras High Court Advocate , Co-optex: Co-optex Chairman Co-optex Employees Union, Madras High Court Advocate
× RELATED வலங்கைமானில் மூடிக்கிடக்கும் கோஆப்டெக்சை மீண்டும் திறக்க வலியுறுத்தல்