மகன் கேட்ட கேள்வியால் அதிர்ச்சி அம்மா... என் அப்பா யாரும்மா? 27 ஆண்டுக்கு முன் பலாத்காரம் செய்தவர்கள் மீது தாய் வழக்கு

ஷாஜகான்பூர்: உத்தர பிரதேசத்தில் தனது தந்தை யார் என மகன் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த தாய், 27 ஆண்டுகளுக்கு முன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில சம்பவங்கள் சினிமாவில் மட்டும்தான் நடக்கும் என சொல்ல முடியாது. நிஜ வாழ்விலும் நடக்கும் என்பதற்கு உதாரணமாக, உத்தர பிரதேசத்தில் ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 27 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். அதாவது, 1993... இதோ அந்த உண்மை கதை... உத்தர பிரதேச மாநிலம், உதம்பூர் மாவட்டம். இங்குள்ள ஒரு சிறிய கிராமம். ஆண்டு 1994. இந்த கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. தாய், தந்தை இல்லாதவர். திருமணமான தனது சகோதரியுடன் வசித்து வந்தார். இவர்களின் உறவினர்கள் நாகி ஹசன், அவரது தம்பி குட்டூவால். இவர்களுக்கு சிறுமியின் மீது ஒரு கண். யாரும் இல்லாத நேரத்தில், சிறுமியை இருவரும் பலாத்காரம் செய்து வந்தனர். இதனால் கர்ப்பமான அச்சிறுமி தனது 13 வயதில், அதாவது 1994ம் ஆண்டில் ஆண் குழந்தையை பெற்றார்.

அக்குழந்தையை உறவினரிடம் கொடுத்து வளர்க்கும்படி, சிறுமியின் சகோதரி கூறினார். பிறகு, தனது தங்கையை காஜிபூரில் உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். ஆண்டுகள் உருண்டன. சிறுமி வளர்ந்து பெரிய பெண்ணாக மாறினார். திருமண வாழ்க்கையில் 10 ஆண்டுகள் கடந்தது. அப்போதுதான், யாரோ ஒருவர் மூலமாக அந்த கணவருக்கு ரகசியம் கசிந்தது. தனது மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்; ரகசியமாக குழந்தை பெற்றவர் என்பது தெரிய வந்தது. மனைவியை விவாகரத்து செய்தார். இது ஒருபுறம் இருக்க. மறுபுறம் உறவினரிடம் வளர்ந்த மகன், தனது தாய், தந்தை பற்றி கேட்டு நச்சரித்தான். இதனால், உண்மை கதையை அவனிடம் உறவினர் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. தாயை சந்தித்த அவன், அவருடன் சேர்ந்து வாழ்ந்தான்.

தனது தந்தை பற்றி கேட்டான். இதனால், மகனிடம் நடந்த சம்பவங்களை விளக்கிய தாய், 27 ஆண்டுகளுக்கு முன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர்கள் மீது போலீசில் இப்போது புகார் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அண்ணன், தம்பி மீது கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது. இது குறித்து காஜிபூர் மாவட்ட எஸ்பி. சஞ்சய் குமார் கூறுகையில், ``மகனுக்கு நடத்தப்படும் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அவனது தந்தை யார் என்பது தெரிய வரும்,’’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>