×

பெரியபாளையத்தில் பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவுகள்: துர்நாற்றத்தால் மக்கள் அவதி

ஊத்துக்கோட்டை: சென்னை - திருப்பதி சாலையில் பெரியபாளையம் கிராமம் உள்ளது. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆரணி ஆற்றின் கரை ஓரத்தில் புகழ் பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும், சென்னை, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ஆரணி ஆற்றை கடந்து தான் அம்மன் கோயிலுக்கு செல்லவேண்டும். அவ்வாறு செல்லும் பக்தர்களின் வசதிக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பவானி அம்மன் கோயிலை இணைக்கும் முக்கிய பாலமாகும். மேலும் சென்னையிலிருந்து திருப்பதி, புத்தூர் செல்பவர்களும் பெரியபாளையம் தரைப்பாலத்தை கடந்து தான் செல்வார்கள்.

இந்நிலையில், பெரியபாளையம் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி 1999ம் ஆண்டு திமுக ஆட்சியில் மேம்பாலம் கட்டப்பட்டது. அதன்பிறகு மக்களும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர். இந்த பாலத்தின் அருகில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து மீன், கோழி போன்ற இறைச்சி கழிவுகளையும், குப்பைகளையும் பாலத்தின் கீழ் கொட்டுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகில் சிவன் கோயில் உள்ளது. இந்த சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தின் கீழ் உள்ள கழிவுகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, “பெரியபாளையம் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் வழியாக அரசு மேல் நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், பவானி அம்மன் கோயில் செல்லவேண்டும். ஆந்திர மாநிலம் புத்தூர், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு இந்த பாலத்தின் வழியை கடந்து தான் செல்ல வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் தற்போது ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பாலத்தின்  அடிப்பகுதியில் இறைச்சிக்கழிவுகளும், குப்பைகளும்  கொட்டப்படுவதால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த கழிவுகளை அகற்றி, பாலத்தின் கீழ் இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Tags : Periyapalayam , Garbage and meat waste dumped under the bridge at Periyapalayam: People suffer from bad smell
× RELATED ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண்...