×

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களில் பிரசாரத்துக்கு கூப்பிட்டால் வர்றேன்!: குலாம்நபி ஆசாத் பேட்டி

புதுடெல்லி: தமிழகம் உட்பட ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்துக்கு என்னை அழைத்தால் வருகிறேன் என்று குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலத்தை நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கடந்தாண்டு நடந்த பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன், ஜி-23 தலைவர்கள் பட்டியலில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, விவேக் தங்கா, கபில் சிபல், மனிஷ் திவாரி, அகிலேஷ் சிங் உள்ளிட்டோருடன் சேர்ந்து குலாம்நபி ஆசாத்தும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.

மேற்கண்ட அதிருப்தி தலைவர்களின் கருத்துக்களால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்குவங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கு மத்தியில், குலாம்நபி ஆசாத் தலைமையிலான ஜி-23 தலைவர்களில் 8 பேர் ஜம்முவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள், கட்சியின் தற்போதைய நிலைமையை சீரமைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினர். இந்நிலையில், குலாம்நபி ஆசாத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘வரவிருக்கும்  ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவேன். கட்சி அல்லது வேட்பாளர் சார்பாக தேர்தல் பிரசாரத்திற்கு எந்த மாநிலத்திற்கு செல்லவும் தயாராக உள்ளேன். அதேபோல் எனது ஆதரவாளர்களும்  தயாராக உள்ளனர்’ என்றார்.

Tags : Prasaram ,Tamil Nadu ,Kulamnabi ,Asad , I will come if I am called to campaign in 5 state elections including Tamil Nadu !: Interview with Ghulam Nabi Azad
× RELATED ₹1 லட்சம் தர்றோம்… போன் நம்பர் கொடுங்க… பாஜ நூதன பிரசாரம்