முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் கார் வழக்கு; வாயில் ‘கர்சீப்’ கட்டிய நிலையில் கார் ஓனரின் சடலம் ஓடையில் மீட்பு: மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், காரின் உரிமையாளர் வாயில் ‘கர்சீப்’ கட்டப்பட்ட நிலையில் நீரோடையில் சடலமாக மீட்கப்பட்டார். இவ்வழக்கு மகாராஷ்டிராஅரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான அடுக்குமாடி வீட்டின் அருகே கடந்த பிப்ரவரி 25ம் தேதி நிறுத்தப்பட்டிருந்த மர்ம காரை போலீசார் பரிசோதித்தனர். அந்தக் காரில் வெடிபொருள்களில் நிரப்பப்படும் 20 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் மிரட்டல் கடிதம் ஒன்று இருந்தது.

இவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், ‘ஜெய்ஷ்-உல்-ஹிந்த்’ என்ற பயங்கரவாத அமைப்பு மர்ம கார் சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வாகன உதிரிபாகங்கள் தொழிலில் ஈடுபட்டு வந்த ஹிரேன் மன்சுக் (48) என்பவருக்குச் அந்தக் கார் சொந்தமானது என்பது தெரியவந்தது. முன்னதாக அந்தக் கார் கடந்த பிப்ரவரி 18ம் தேதி திருடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஹிரேன் மன்சுக் போலீசாரிடம் தனது கார் திருடப்பட்டது குறித்து புகார் அளித்திருந்தார். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹிரேன் மன்சுக்கை காணவில்லை என்று அவரின் குடும்பத்தினர் தானேவில் உள்ள நவுபாடா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் அவரை தேடி வந்த நிலையில், தானே நகரில் உள்ள கல்வா கிரீக் நீரோடையில் ஹிரேன் மன்சுக் உடல் சடலமாக கிடந்தது. அதையடுத்து அந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெலட்டின் குச்சிகளுடன் நின்ற கார் சம்பவத்தில் பிரதான சாட்சியாக இருந்த ஹிரேன் மன்சுக் மர்மமான முறையில் இறந்தது முக்கிய திருப்பத்தை இவ்வழக்கில் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகையில், ‘மீட்கப்பட்ட சடலத்தில் எந்தக் காயமும் இல்லை. பிரேத பரிசோதனை ஆய்வறிக்கைக்கு பின்னரே விபரங்கள் தெரியவரும். அம்பானியின் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த கார், ஹிரேனது அல்ல. அதன் உண்மையான உரிமையாளர் காரில் சில வேலைப்பாடுகளை மேற்கொள்வதற்காக, அதனை ஹிரேனிடம் ஒப்படைத்து உள்ளார். இவ்வழக்கு குற்றத்தடுப்பு பிரிவிடம் இருந்து மாநில பயங்கரவாதத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்றார். ஆனால், இவரது பதிலுக்கு முன்னாள் முதல்வரான எதிர்கட்சி தலைவர் பட்நவிஸ் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி, மாநில அரசுக்கு எதிராக பல்வேறு குற்றம்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘சிற்றோடைக்குள் குதித்து  ஹிரேன் மன்சுக் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் ெதரியவந்தது. ஆனால், அவரது வாயில் ​​5 கைக்குட்டைகளை (கர்சீப்) வைத்து அடைக்கப்பட்டு இருந்தது. அதனால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஹிரேன் மன்சுகின் உடல் சிற்றோடையில் இருந்து மீட்கப்பட்ட போது அவரது உடல் முழுவதும் சேற்றில் நனைந்து இருந்தது. சட்டை கிழிக்கப்பட்டும், ஜீன்ஸ் பேன்ட் அப்படியே இருந்தது. கைக்குட்டையை வாயில் கட்டி இருந்ததால், கொலையாகவும் இருக்கலாம். தொடர் விசாரணை நடக்கிறது’ என்றனர்.

முகேஷ் அம்பானி வீட்டருகே மர்ம வெடிபொருள் கார் வழக்கில் காரின் உரிமையாளர் மர்மமான முறையில் இறந்ததால் இவ்விவகாரம் மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் அழைத்து சென்றது

மன்சுக்கின் மனைவி விமலா ஹிரேன் கூறுகையில், ‘என் கணவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவரால் தற்கொலை பற்றி யோசிக்க கூட முடியாது. முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். கடந்த வியாழக்கிழமை, காவல்துறையினர் விசாரணைக்காக என் கணவரை அழைத்து சென்றனர். அதன் பின்னர் அவர் திரும்பவில்லை’ என்றார்.

Related Stories:

More