தமிழகம்-புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்; திமுகவில் நேர்காணல் இன்றுடன் முடிந்தது: வருகிற 10ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகம்-புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் இன்றுடன் நேர்காணல் முடிந்தது. இறுதி நாளான இன்று காலை திருவள்ளூர், சென்னை மாவட்டத்துக்கான நேர்காணல் நடைபெற்றது. வருகிற 10ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த மாதம் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 8,388 பேர் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். இதில் 7,967 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த 2ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த நேர்காணல் நடந்தது. அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த நிலையில் இன்றுடன் திமுக நேர்காணல் முடிந்தது. இறுதி நாளான இன்று காலையில் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களுக்கான ேநர்காணல் நடைபெற்றது.

அவர்களிடம் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னணி தலைவர்கள் நேர்காணல் நடத்தினார். அதில், கட்சியில் எத்தனை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறீர்கள், கட்சிக்காக உங்களின் பங்களிப்பு எந்தளவில் உள்ளது, கல்வி தகுதி என்ன? திமுக நடத்திய எந்தெந்த போராட்டங்களில் பங்கேற்றீர்கள், தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எந்தளவில் உள்ளது. தொகுதியில் உங்களுடைய செல்வாக்கு என்ன?. கூட்டணி கட்சிகளில் செல்வாக்கு எவ்வாறு உள்ளது?. திமுக குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் தொகுதியை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டார். உங்கள் தொகுதியை கூட்டணி தொகுதிக்கு ஒதுக்கும் போது சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் அப்போது அறிவுரை வழங்கினார்.

சென்னை கொளத்தூர் தொகுதியல் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார்.  அவரிடம் துரைமுருகன் நேர்காணல் நடத்தினார். அப்போது அவரிடம் துரைமுருகன் பல்வேறு கேள்விகள் கேட்டார்.  அதற்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.  சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் நேர்காணலில் கலந்து கொண்டார்.  இறுதி நாள் என்பதால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஏராளமான திமுகவினர் திரண்டனர். இதனால், தொண்டர்கள் வெள்ளத்தில் அண்ணா அறிவாலயம் நிரம்பி வழிந்தது.

நேர்காணல் நிறைவடைந்தையடுத்து வருகிற 10ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். இதைத் தொடர்ந்து 11ம் தேதி திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. இதில் தமிழகம் முழுவதுக்கும் ஒரு தேர்தல் அறிக்கையும், தொகுதிக்கு என்று ஒரு தேர்தல் அறிக்கையும் தனித்தனியாக வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு 12ம் தேதி சேலம், நாமக்கல், கரூர் மாவட்டம், 13ம் தேதி திண்டுக்கல், மதுரை மாவட்டத்திலும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

14ம் தேதி முதல் தமிழகம் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் ெபாதுக்கூட்டத்திலும் பங்கேற்று அவர் பேசுகிறார்.

Related Stories:

>