×

ஆண்டிபட்டி பகுதியில் கொய்யாவில் அம்மை புள்ளி நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கொய்யாக்காய்களில் கத்தாளப் பூச்சி, அம்மை புள்ளி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால்,  விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, சித்தையகவுண்டன்பட்டி,  சித்தார்பட்டி, வெண்டிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொய்யா தோப்புகள் அதிகமாக உள்ளன.

 இப்பகுதியில் விளையும் கொய்யாக்  காய்களை தேனி மற்றும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேந்த வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர்.  மாதந்தோறும் வருவாய் தரும் கொய்யா தோப்புகளை, விவசாயிகள் 5 முதல் 10 ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கொய்யாக்காய்களில் கத்தாள பூச்சி, அம்மை புள்ளி நோய் தாக்குதல்  ஏற்பட்டுள்ளது; மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ கொய்யாக்காயை ரூ.30 முதல் ரூ.40 வரை வாங்கிய வியாபாரிகள், தற்போது நோய்  தாக்குதலால் ரூ.15 முதல் 20 வரையே வாங்குகின்றனர். இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயி கலைச்செல்வன் கூறியதாவது: கொய்யாக்காயில் கத்தாளப் பூச்சி, அம்மை புள்ளி நோய் தாக்கத்தால் வியாபாரிகள் விலை  குறைவாக வாங்குகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Guava ,Andipatti , Measles outbreak in Guava in Andipatti area: Farmers worried
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...