×

நாகர்கோவில் அருகே தர்பூசணி பழங்களுக்கு அடியில் பதுக்கி கடத்திய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே தர்பூசணி பழங்களுக்கு அடியில், பதுக்கி கடத்திய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.   கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை சிறப்பு தாசில்தார் பாபு ரமேஷ் தலைமையில் எஸ்.எஸ்.ஐ. ரவிச்சந்திரன், ஏட்டுகள் செந்தில்குமார்,  பிரபின் தாஸ், ஓட்டுனர் டேவிட் உள்ளிட்டோர் கொண்ட பறக்கும்படையினர், நேற்று காலை நாகர்கோவில் அருகே வாகன தணிக்கை செய்து  கொண்டிருந்தனர்.

 அப்போது விசுவாசபுரம் அருகே சோதனையில் இருந்த போது, திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த டெம்போ  ஒன்றை மறித்து சோதனை செய்ய முயன்றனர். டெம்போவில் இருந்த 2 பேர் பறக்கும் படையினரை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓட  முயன்றனர். ஆனால் போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் டெம்போவில் நடத்திய சோதனையில் தர்ப்பூசணி பழங்கள் அடியில் ரேஷன்  அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த அரிசி மூடைகளை கைப்பற்றிய அதிகாரிகள் டெம்போ மற்றும் அரிசி மூடைகளை கோணம் உணவு கிடங்குக்கு அனுப்பி  வைத்தனர். பிடிபட்ட 2 பேரையும் குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். டெம்போவில் 6000 கிலோ அரிசி  இருந்ததாக கூறப்படுகிறது. நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்த அரிசியை சேகரித்து தர்பூசணி கொண்டு செல்வது போல் கேரளாவுக்கு  கடத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது. பிடிபட்டவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வரலாம் என அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Tags : Nagarco , நாகர்கோவில் அருகே தர்பூசணி பழங்களுக்கு அடியில் பதுக்கி கடத்திய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது
× RELATED நாகர்கோவில் மாநகராட்சிக்கு 104 தூய்மை...