×

டிஜிபி ராஜேஷ்தாசை கைது செய்யக்கோரி முற்றுகை: போராடிய மாணவிகளை தரதரவென இழுத்து கைது செய்த போலீசார்...மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு

மதுரை: டிஜிபி ராஜேஷ்தாஸை கைது செய்யக்கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களில் மாணவிகளை, போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பெண் காவல்துறை அதிகாரிக்கு  பாலியல்ரீதியாக தொந்தரவு அளித்த புகாரின் கீழ் டிஜிபி ராஜேஷ்தாஸை பணியிடை நீக்கம் செய்து கைது செய்யக்கோரியும், அவருக்கு உதவிய காவல்துறை அதிகாரிகளை கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும்  அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றபோது, போலீசார் அலுவலக கேட்டை மூடி தடுத்தனர்.அப்போது மாணவ, மாணவிகள், காவல்துறை உயரதிகாரிகளுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர்  வனசுந்தர் திடீரென மாணவர்கள் அமைப்பினரை தள்ளி விட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியரை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்ய முயன்றார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைப்பினர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஆண் போலீசார், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்,  பெண்களை தரதரவென இழுத்துச் சென்று, வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்தனர். வாலிபர் சங்க மாநில செயலாளர் பாலா தலைமையில் மாணவிகள் உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

அனைத்திந்திய மாதர் சங்க மாநில நிர்வாகி சசிகலா கூறும்போது, ‘‘மாணவிகளை ஆண் போலீசார் தரதரவென இழுத்துச் சென்றது கண்டிக்கத்தக்கது. பெண் போலீசாரைக் கொண்டு கைது செய்திருக்கலாம். இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்கள்  மீது உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். மாணவி டான்யா கூறும்போது, ‘‘பாலியல்ரீதியாக செயல்பட்ட போலீசை கண்டித்துத்தான் இந்த போராட்டம் நடத்தினோம். பெண் என்றும் பாராமல், மாணவிகளை ஆண் போலீசாரை கொண்டு இழுத்து கைது செய்தது எந்த விதத்தில் நியாயம்’’  என்றார்.

Tags : DGP ,Rajeshthas ,Madurai Collector , The siege demanding the arrest of DGP Rajeshthas: The police who dragged the struggling students and arrested them ...
× RELATED ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு