×

10.5% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சாயல்குடி: ஒரு பிரிவினருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை கண்டித்து, கடலாடி, முதுகுளத்தூரில் கருப்புக்கொடி ஏந்தி ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசு ஒரு பிரிவினருக்கு சாதகமாக நிறைவேற்றிய 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். சீர்மரபினர் சாதி வாரியாக கணக்கெடுப்பை உடனடியாக துவங்க வேண்டும். டிஎன்டி பிரிவினர் உள்பட 68 பிரிவினர்  மற்றும் எம்பிசியில் உள்ள 93 சமூகத்திற்கும் ஒரே மாதிரியாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், ஆர்ப்பாட்டமும் நடத்தி  வருகின்றனர்.

மேலும், சமூக வலைதளங்களிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதிவிட்டும் வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, முதுகுளத்தூர், ஆ.புனவாசல், சாத்தங்குடி, வெள்ளாங்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள தெருக்கள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தமிழக அரசிற்கு மக்கள்  எதிர்ப்பை தெரிவித்தனர்.

கடலாடியில் தேவர் மகா சபை சார்பில் நடந்த கருப்புக்கொடி ஏந்திய ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் ராஜேந்திரன் தலைமை வகிக்க, செயலாளர் முருகன், பொருளாளர் முனியசாமி முன்னிலை வகித்தனர். இதேபோல் முதுகுளத்தூர் பஸ்  ஸ்டாண்டில்
ஆப்பநாடு மறவர் சங்க முன்னாள் தலைவர் மயில்வேல் மணிபாண்டியன் தலைமையிலும், முக்குலத்தோர் முன்னேற்ற சங்க தலைவர் வீரப்பெருமாள் முன்னிலையில் கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.

Tags : Tamil Nadu government , Black flag demonstration condemning the Tamil Nadu government for providing 10.5% reservation
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...