×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி மீண்டும் துவக்கம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என 2 வனக்கோட்டங்களில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என். பாளையம், விளாமுண்டி, கடம்பூர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு, மான், கரடி, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த பகுதியில் ஆண்டுதோறும் ஜூன், டிசம்பர் மாதங்களில் 6 மாதத்திற்கு ஒருமுறை மழை காலத்திற்கு முன், பின் என இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி மழை காலத்திற்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கிய நிலையில் அன்றைய தினம் விளாமுண்டி வனச்சரகம் மாயாற்றின் தெற்குப் பகுதி வனத்தில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒற்றை யானை தாக்கியதில் பணியில் இருந்த வனக்காவலர் சதீஷ்குமார், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வனக்காப்பாளர் கணேஷ் படுகாயமடைந்தார். யானை தாக்கி இருவர் உயிரிழந்ததால் கணக்கெடுப்பு பணி தொடங்கிய முதல் தினமே பணி கைவிடப்பட்டது. இந்நிலையில், விடுபட்ட கணக்கெடுப்பு பணி மீண்டும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நேற்று காலை தொடங்கியது. இம்முறை 10 வனச்சரகங்களிலும் தன்னார்வலர்களை பயன்படுத்தாமல் வனத்துறை ஊழியர்கள் குழுக்களாக பிரிந்து வனவிலங்கு கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருவதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர்கள் கிருபா சங்கர், தேவேந்திரகுமார் மீனா இருவரும் தெரிவித்தனர்.

Tags : Vandary Tigers Archive , Wildlife survey work resumes at Satyamangalam Tiger Reserve
× RELATED மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர்...