×

மதுரை உட்பட தென்மாவட்டங்களில் 2 அமைச்சர்களுக்கு சீட்டு டர்ர்ர்ர்...

சுபமுகூர்த்த தினமான நேற்று தங்களது முதல் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அடுத்த பட்டியல் வரும்போது, தென்மாவட்டங்களை சேர்ந்த 2 அமைச்சர்களுக்கு சீட் கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் என்ன என்பதை பார்ப்போமா?

தெர்மகோல் புகழ்...
தென்மாவட்டங்களில் முதன்மையான நகரமாக கருதப்படும் மதுரை நகர், புறநகரில் அமைச்சர்களாக செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளனர். அமைச்சர் செல்லூர் ராஜூவை பொறுத்தவரை வைகை அணையை தெர்மகோல் மூலமாக மூடி உலகப்புகழ் (?!?) பெற்றவர். சமீபத்தில், ஒரு சமூகம் குறித்து இவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் இழுத்தடிப்பால் மதுரை நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. சாலைகள் குண்டும், குழியுமாக படுமோசமாக உள்ளது. இம்முறை சீட் கிடைத்தாலும் ஜெயிப்பது சந்தேகமே என உள்ளடி வேலைக்கு தயாராக உள்ள கட்சியினர் தெரிவிக்கின்றனர். தன்னை இபிஎஸ் - ஓபிஎஸ் இருவருக்கும் பொதுவானவராக காட்டிக் கொள்வதன் மூலம், எப்படியும் விரும்பிய தொகுதியை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

‘‘ஜம்பிங்’’ அமைச்சர்...
தொகுதியில் மட்டுமல்ல... சூழலுக்கேற்ற வகையில் மாற்றிப் பேசி கட்சிக்குள் ‘‘குட்டிக்கலகம்’’ ஏற்படுத்துபவர் என பெயரெடுத்தவர் உதயகுமார். கடந்த 2011 தேர்தலில் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வென்று அமைச்சரானார். அங்கு மற்றொரு அமைச்சரோடு ஈடுகொடுக்க முடியாமல், மதுரை மாவட்டத்துக்கு தாவினார். ஜெயலலிதா இறந்த பின் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, சசிகலாவை முதல்வராக முன்மொழிந்து கட்சிக்குள் முதல்கட்ட சலசலப்பை உருவாக்கியவர். மீண்டும் தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கு உயர்ரக கம்ப்யூட்டர்களை வழங்கி ‘‘தேர்தல் வேலை’’களை துவக்கி விட்டார். தேனி எம்பி தேர்தலில் ஓபிஎஸ் மகனுக்காக முழு வீச்சில் பணியாற்றினாலும், எடப்பாடியின் தீவிர ஆதரவாளராகவே தன்னை காட்டிக் கொண்டு வருகிறார். திருமங்கலம் தொகுதியில் மீண்டும் களமிறங்கும் திட்டத்தில் மும்முரமாக களப்பணி ஆற்றினாலும், தொடர்ந்து வெளியூர் ஆட்களே இங்கு போட்டியிட்டுக் கொண்டிருந்தால், நமது பிடி தளர்ந்து விடும் என உள்ளூர் அதிமுகவினர் அதிருப்தியில் இருப்பது இவருக்கு பெரிய மைனஸ்.

பாஸ்... ப்யூஸ்...
இப்படி ஒரு அமைச்சர் இருக்கிறாரா என தமிழக மக்களில் பலருக்கு தெரியாத ஒருவர் இருக்கிறார் என்றால் அது அமைச்சர் பாஸ்கரன் மட்டுமே. சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2வது சுற்றில் அமைச்சரானவர். சர்ச்சை பேச்சில் மற்ற அமைச்சர்களுக்கு ‘‘டஃப் பைட்’’ தருவார். தொகுதியில் போதிய செல்வாக்கு இல்லாதது, மாவட்ட செயலாளர், கட்சியினரிடையே அனுசரித்து போகாதது உள்ளிட்ட காரணங்களால், இம்முறை இவருக்கு சீட் கிடைக்க ‘‘வாய்ப்பில்லை ராஜா’’ என்றுதான் சொல்ல வேண்டும்.

சர்ச்சை சரவெடி...
பிரிக்க முடியாதது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், சர்ச்சை பேச்சும் எனலாம். தனது பேச்சில் ‘‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது பொய்’’, ‘‘ஜெயலலிதாவால் கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன்’’, எம்ஜிஆர், நரசிம்மராவை பாரத பிரதமராக்கியது, சிறுவனை செருப்பு மாட்ட வைத்தது உட்பட பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். இந்த முறை இவருக்கு சீட் தரவே கூடாது என, திண்டுக்கல் மாவட்டத்தில் மாஜி அமைச்சர் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். தலைமைக்கும் இவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. எனவே, இவருக்கும் சீட்டு ‘‘சும்மா கிழி’’ தான்.

டாடி... டாடி.. ஓ மை டாடி...
பிரதமர் மோடியை ‘‘டாடி’’ என அழைத்து பாஜவினரையே கதற வைத்தவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. சிவகாசி தொகுதி எம்எல்ஏ. சமீபகாலமாக இவரது தீவிர பாஜ ஆதரவு செயல்பாடு அதிமுக கட்சிக்குள்ளே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தடை கோரிய வழக்கால் ஆலைகள் பல நாட்கள் மூடப்பட்ட நிலையில், பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்காக ஆதரவாக இவர் செயல்படவில்லை என்ற பேச்சு பரவலாக உள்ளது, ‘‘கொரோனா காலத்தில் தங்களை கண்டுகொள்ளவில்லை. மாவட்டத்தை மறந்து சென்னையிலே முகாமிட்டுள்ளார். தொகுதிக்கும் பெரிதாக எதுவும் செய்யவில்லை’’ என்ற எண்ணம் மக்களிடம் பரவலாக உள்ளது. களத்தில் நின்றாலும் ஜெயிப்பது குதிரைக்கொம்புதான் என்கின்றனர்.

வேட்டியை உருவுப்பா...
எடப்பாடி அரசில் நீக்கப்பட்ட ஒரே அமைச்சர் என்ற ‘‘பெருமையுடன்’’ உலா வருகிறார் ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன். அதிமுக மூத்த நிர்வாகிகளை மேடையில் ஒருமையில் பேசுவது, மாவட்ட செயலாளருடன் மல்லுக்கட்டு, அமமுகவினர் அதிமுக கரை வேட்டி கட்டினால் உருவுங்கள் என பேசியது, என இவர் மீது ஏகப்பட்ட எப்.ஐ.ஆர். கட்சித்தொண்டர்களிடமும் நல்ல பெயர் இல்லை. இவருக்கு சீட் வாய்ப்பு குறைவாகவே உள்ளன. ஒருவேளை தந்தாலும் வெற்றிக்கான வாய்ப்பு துளியும் இல்லை என கட்சி நிர்வாகிகளே கூறுகின்றனர்.



Tags : Madurai , Ace ticket for 2 ministers in the southern districts including Madurai
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...