×

காங்கிரஸ் செயற்குழு சத்தியமூர்த்தி பவனில் கூடியது திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடிவு: மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 7ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக கூட்டணியில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 8 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த முறை திமுகதான் ஆட்சி அமைக்கும் என சொல்லப்படும் நிலையில் அக்கட்சி தொகுதி பங்கீடு, தொகுதிகளை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்டவற்றில் மிகவும் கவனமாக கையாண்டு வருகிறது. இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் முடித்துள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தல் படி நேற்று முன்தினம் மாவட்ட தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தனித்தனியாக கருத்து கேட்டார். இதில், மாவட்ட தலைவர்கள் அனைவரும் திமுக கூட்டணியை வரவேற்று பேசினர்.

அதேநேரம் காங்கிரசுக்கான தொகுதிகளை அதிகமாக கேட்டு வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இதை தொடர்ந்து பேட்டி அளித்த தினேஷ் குண்டுராவ், ‘‘தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசியதாக வெளியான தகவலில் உண்மையில்லை. அது வதந்தி. செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் திமுகவுடன் அடுத்தகட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள்’’ என்று தெரிவித்தார்.  இந்நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர்கள் வீரப்ப மொய்லி, பள்ளம் ராஜூ மற்றும் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அவர்களுடன் திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் வேட்பாளர்கள் தேர்வு, எந்தெந்த தொகுதிகளை கேட்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டம் முடிவடைந்த பின்பு திமுகவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு செல்ல உள்ளதாக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விரைவில் முடிவு எட்டப்படும்
கூட்டம் முடிவடைந்ததும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை தொடர்கிறது. கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிகளை கேட்டு பெறுவோம். விரைவில் முடிவு எட்டப்படும்’’ என்றார்.



Tags : Congress ,Sathyamoorthy Bhavan ,DMK , Congress executive committee meets at Sathyamoorthy Bhavan to decide on block allocation talks with DMK: Senior leaders consult
× RELATED தேர்தலுக்கு பிறகு எங்கே பாஜ? என்று...