×

15 சீட்கள் வரை தர அதிமுக தயார் அதிக தொகுதிகள் கேட்டு தேமுதிக தொடர்ந்து பிடிவாதம்: இறுதிகெடு விதித்தும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை

சென்னை: அதிமுக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளை மீண்டும் எங்களுக்கு வழங்க வேண்டும்  என்று விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் வற்புறுத்தி வருகின்றனர். வாக்கு வங்கியே இல்லாமல் அதிக தொகுதிகளை கேட்பதா என்று அதிமுக அவர்களை சில நாட்களாக கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. அவர்களை பற்றி எதுவும் கூறாமல், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியது.
தேர்தல் நெருங்கி வருவதால், திடீரென அமைச்சர்கள் ேதமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜயகாந்த் பிரசாரத்துக்கு வந்தால் 14  தொகுதிகள் தருகிறோம். இல்லா விட்டால் 10 தொகுதிகள்தான் தர முடியும் என்று அதிமுக கூறிவிட்டது. இதனை தேமுதிக தரப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அதிக சீட் வேண்டும். ஒரு ராஜ்யசபா சீட், விஜயகாந்த் மகனுக்காக விருகம்பாக்கம் தொகுதியை தர வேண்டும். தேர்தல் செலவுக்கு பாமகவுக்கு இணையாக பணம் தர வேண்டும் என்று 3 கோரிக்கையை முன்வைத்தனர்.

அப்போது, முதல்வர் 10 தொகுதிகள் வரை தர சம்மதித்தார். ராஜ்யசபா எம்பி சீட் குறித்து இப்போது பேச வேண்டாம். தேர்தல் முடிந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று கூறி விட்டார். விருகம்பாக்கம் தொகுதியை வேண்டுமென்றால் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். மேலும் தேர்தல் செலவுக்காக அமைச்சர் தங்கமணியை போய் பாருங்கள் என்று கூறி முதல்வர் அனுப்பி விட்டார். முதல்வர் அறிவித்தவாறு தேமுதிகவினர் அமைச்சரிடம் போய் பேசினர். அப்போது அவர்கள் எதிர்பார்த்த தொகையை தர அமைச்சர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை தேமுதிகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிமுக தரப்பில் 3 முறை அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
இந்நிலையில், திடீரென அதிமுக தரப்பில் 15 தொகுதிகளை வழங்குகிறோம். தேர்தல் செலவுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். இதற்கு சம்மதம் என்றால் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தனர். ஆனால், தேமுதிகவினர் 25 தொகுதிகளை கட்டாயம் தர வேண்டும். எம்பி சீட் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து வருகின்றனர்.

கடைசியாக அதிமுக 15 தொகுதிகள் தருகிறோம். வந்தால் வாங்க. இல்லா விட்டால் போங்கள் என்று கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  நேற்று வரை காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. ஆனால், நேற்றும் தேமுதிகவினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அதிமுக எச்சரிக்கையை தொடர்ந்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் வர தேமுதிக சம்மதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேமுதிக துணை பொது செயலாளர் பார்த்தசாரதி அளித்த பேட்டி: இன்று வரை அதிமுகவுடன்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எண்ணிக்கை முடிவான பிறகுதான் தொகுதியை பற்றி பேச முடியும். அதேபோல் எல்லா தொகுதியையும் அறிவிக்க முடியாது. ஏனென்றால், இந்த கூட்டணியில் தேமுதிக, பாமக, பாஜ, அதிமுக இருக்கிறது. இந்த 4 பேரிடமும் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு அனைவரும் உட்கார்ந்து யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் வேண்டுமோ, அந்த தொகுதியை நாங்கள் கேட்டு பெறுவோம்.

பாமவுக்கு இணையாக தொகுதிகள் மட்டுமல்ல, 2011ல் ஜெயலலிதா இருக்கும்போது 41 தொகுதி கேட்டோம். அதைபோலவே இந்த முறையும் முதல்கட்டமாக 41 தொகுதிகளை நாங்கள் கேட்டோம். இன்னும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. சுமுகமாக முடியும்போது தெரிவிப்போம்.  ராஜ்யசபா சீட் ஒதுக்க கோரிக்கை வைத்தது உண்மை தான். எல்லாம் பெரிய கட்சியாக இருப்பதால் குறைவாகதான் நிற்க முடியும் என சொன்னார்கள். நாங்களும் குறைத்து வந்திருக்கிறோம். கடைசியாக நாங்கள் 25 தொகுதிகள் கேட்டு இருக்கிறோம். அவர்கள் இன்னும் குறைத்து வருகிறார்கள். கொஞ்சம், கொஞ்சமாக பேசி முடிப்போம்.  பாமக தேர்தல் அறிக்கையில் எங்கள் கட்சியின் சின்னம் இடம் பெறாதது குறித்து நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் போய் கேட்க முடியாது. எங்கள் கட்சி கூட்டத்தில் நாங்கள் (அதிமுக) குறித்து பேசுகிறோம். அது கருத்து வேறுபாடு கிடையாது. கட்சிக் கூட்டத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்தை சொல்வது வழக்கம். 2 நாளில் எங்கள் தொகுதி பிரச்னை முடியும். நல்ல செய்தி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Temujin continues to ask for more constituencies to prepare AIADMK for up to 15 seats: No deadline for negotiations
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...