×

சசிகலா அரசியலிலிருந்து 'விலகினாரா' - 'ஒதுங்கினாரா?': அதிமுக-வுக்குள் புகுந்து அரசியல் விளையாடும் பா.ஜ.க...கீ.வீரமணி குற்றச்சாட்டு..!!

சென்னை: தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த சசிகலாவை அரசியலில் இருந்து ஒதுங்க செய்தது பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்விளைவு தான் ஏற்படுத்தும் என்று திராவிடக்கழக தலைவர், ஆசிரியர் கீ. வீரமணி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளில் அவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விரைவில் தொண்டர்களையும், மக்களையும் சந்திப்பேன் என்று சசிகலா கூறியதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதிமுக-வில் உரிமை கோரிய வழக்கையும் விரைவுபடுத்த சசிகலா முயற்சி எடுத்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக அணிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்று அமித்ஷா நெருக்கடி கொடுத்ததாகவும், இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானதாக அவர் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தேக்கத்தை போக்கி தந்திரமான சில வியூகத்தை வகுக்க பாஜக திட்டமிட்டே சசிகலாவை அரசியலில் இருந்து ஒதுக்கிவிட அறிக்கைவிட ஏற்பாடு செய்திருப்பதாக வீரமணி தெரிவித்துள்ளார். இதன்மூலம் அதிமுக-வை வளைத்துவிட பாஜக செய்கின்ற ஒரு ஏற்பாடாக சசிகலாவை வைத்தே இந்த காய் நகர்த்தப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

தீவிர அரசியலில் ஈடுபட போவதாக வேகம் காட்டியவர், தற்போது திடீரென யூ டேர்ன் எடுத்து அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிடுவதை சாதாரணமாகவோ, இயல்பானதாகவோ அரசியல் தெரிந்தவர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். சசிகலாவை ஒதுங்கி இருக்க செய்வதன் மூலம், அவரின் ஆதரவாளர்களின் வாக்குகளை அதிமுக, பாஜக கூட்டணிக்கு கொண்டுவரலாம் என்ற ஒரு கணக்கு இதற்குள் இருக்கிறது என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

ஆனால் இது தப்பு கணக்கே என்றும் ஆளும் அதிமுக-வை ஏற்கனவே பல குழப்பங்களும், கோஷ்டிகளும், பனி போர்களும் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், சசிகலா எடுத்த இந்த நிலைப்பாடு மேலும் அதிருப்தியையும், நம்பகமற்ற தன்மையையும் ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். இதனால் திமுக-வின் வெற்றி திசை மேலும் பிரகாசமாகவோ ஜொலிக்கும் என்று வீரமணி தெரிவித்துள்ளார்.


Tags : Sasikala ,BJP ,AIADMK ,K. Veeramani , Sasikala, Politics, AIADMK, BJP, Kee. Veeramani
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...