பவானிசாகர் அணை அருகே ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்-கிராம மக்கள் அச்சம்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி இரவு நேரத்தில் வனத்தைவிட்டு வெளியேறும் நிகழ்வு அதிகரித்துள்ளது. பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் 3 காட்டு யானைகள் பவானிசாகர் அணையின் கரை பகுதியில் நடமாடுவதோடு இரவில் அணை முன்புள்ள புங்கார் கிராமத்தில் நுழைந்து வீதிகளில் சுற்றித் திரிகின்றன.

நேற்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய 3 காட்டு யானைகள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுச்சுவரை சேதப்படுத்திவிட்டு ஊருக்குள் நுழைந்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கழிவறையின் மேல் மூடியின் மேல் கால் வைத்ததால் கான்கிரீட் சிலாப் கல் உடைந்து சேதமடைந்தது. யானைகள் ஊருக்குள் சுற்றி திரிவதை கண்ட கிராம மக்கள் சத்தம் போட்டதையடுத்து காட்டுயானைகள் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றன.

கடந்த சில நாட்களாக தினமும் இரவில் காட்டு யானைகள் புங்கார் கிராமத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டு யானைகள் வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>