×

189வது அவதார தினவிழா அம்பை வாகைபதியில் அய்யா வைகுண்டர் மாசி மகா ஊர்வலம்-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அம்பை :  அம்பை வாகைக்குளத்தில் அய்யா வைகுண்டர் 189வது அவதார தினத்தையொட்டி நடந்த மாசி மகா ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அம்பை அருகே வாகைக்குளத்தில் பிரசித்தி பெற்ற வாகைபதி ஸ்ரீமன்நாராயணசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி 20ம்நாள் அய்யா
அவதார தினத்தன்றுமாசி மகா ஊர்வலமும் நடைபெறும். இந்தஆண்டு அய்யா வைகுண்டரின் 189வது அவதார தினத்தையொட்டி மாசி மகா ஊர்வலம் அம்பை கிருஷ்ணன் கோயில் அருகில் இருந்து புறப்பட்டது.

ஊர்வலத்தை அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாகைபதி அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி முன் நின்று முறை நடத்தி ஆராட்டுடன் மேற்கு நோக்கி வாகைபதி சென்றடைந்தது. இந்த மாசி மகா ஊர்வலத்தில் அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 32 பதிகளில் இருந்து அய்யா வைகுண்டர் அனுமன், பல்லக்கு, தொட்டில், கருடன், காளை, நாகம், வேல், பூம்பல்லக்கு போன்ற வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஊர்வலத்திற்கு முன் சிறுவர், சிறுமியர்களின் கோலாட்டமும், இளைஞர்களின் செண்டை மேளமும், அய்யாவின் ஹர ஹர கோஷங்கள்
முழங்க ஊர்வலமாக சென்றனர்.தொடர்ந்து வாகைபதி குளத்தில் புனித நீராடினர். ஊர்வலம் வாகைபதி வந்தடைந்ததும் அங்கு சிறப்பு பணிவிடைகள் செய்யப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு பதிகளுக்கும் வாகன வசதி செய்யப்பட்டிருந்தது.

ஏற்பாடுகளை அம்பை வட்டார வாகைபதி அய்யாவழி அன்பு கொடிமக்கள் செய்திருந்தனர். மாசி மகா ஊர்வலத்தையொட்டி அம்பை பகுதியில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டு இருந்தது. இதனால் சிறிது நேரம் மெயின்ரோடு பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.


Tags : Ayya ,Vaikundar ,Masi ,Maha procession ,189th incarnation day festival ,Ambai Vagaipathi , Ambai: Thousands of people at the Masi Maha procession on the occasion of the 189th incarnation of Ayya Vaikundar in Ambai Vagaikulam
× RELATED அகிலாண்டேஸ்வரி கோயில் தளிகையுடன்...