×

ரமலான் அன்று சிபிஎஸ்இ தேர்வுகளை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் : சு. வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய கல்வி அமைச்சர் பதில்

சென்னை : ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வுகள் நடந்தேறுகிற சூழல் இருப்பதைச் சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வி அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) கடிதம் எழுதியிருந்தார். அக் கோரிக்கை பரிசீலிக்கப்படுமென்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்துள்ளார்.

*10 -12ம் வகுப்பு தேர்வுகள்*

இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாளான ரமலானுக்கு இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே 14 அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறுமென்பதால் ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதை கணக்கிற் கொள்ளாமல் சி.பி.எஸ். இ 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகளை மே 13 மற்றும் மே 15 தேதிகளில் அறிவித்துள்ளது. இந்த தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்திருந்தார்.

*கல்வி அமைச்சர் பதில்*

இதற்கு பிப்ரவரி 23, 2021 தேதியிட்ட கடிதம் மூலம் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்துள்ள பதிலில் சி.பி.எஸ்.இ தேர்வுத் தேதிகளை மாற்றுவது குறித்த உங்கள் பிப்ரவரி 8 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. அதன் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி, எனது கோரிக்கை பரிசீலிக்கப்படுவது மகிழ்ச்சி. நல்ல முடிவு விரைவில் வருமென்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags : CBSE ,Ramadan ,Union Education Minister ,Venkatesh MP , சு. வெங்கடேசன்
× RELATED ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து