×

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க மின்சார கட்டமைப்புகள், தூத்துக்குடி, மும்பை துறைமுகங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்த சீன ஹேக்கர்கள் சதி!!

மும்பை : இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக மின்சார கட்டமைப்புகள் மற்றும் தமிழகத்தின் தூத்துக்குடி, மராட்டியத்தின் மும்பை துறைமுகங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்த சீன ஆதரவு குழுக்கள் ஈடுபட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாநகரத்தில் கடந்த அக்டோபர் 12ம் தேதி காலை 10 மணி முதல் சுமார் 15 மணி நேரத்திற்கு மின்சாரம் முடங்கியது. இதனால் மும்பையில் பொருளாதார கட்டமைப்புகள் கணிசமான பாதிப்புகளை சந்தித்தன.

இந்த நிலையில், இந்தியா, சீன ராணுவ மோதலால் லடாக்கில் பதற்றம் உச்சத்தில் இருந்த நாட்களில் சீன ஹேக்கர்கள் இந்திய மின்சாரத்துறையின் கணினிகளில் புகுந்து நாச வேலைகளில் ஈடுபட்டதை அமெரிக்கவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக ரெட் எக்கோ என்ற சீன ஆதரவு சைபர் தாக்குதல் குழு இந்தியாவின் மின்சார கட்டமைப்புகள் மற்றும் துறைமுகங்களின் செயல்களை முடக்க திட்டமிட்டு இருப்பதாக ரெக்கார்டட் பியூச்சர் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்திய நிறுவனங்களின் கணினி கட்டமைப்புகளை ஹேக் செய்து அதன் செயல்பாடுகளை முடக்கி பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்த ரெட் எக்கோ திட்டமிட்டு இருப்பதாக ரெக்கார்டட் பியூச்சர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள 10 முக்கிய மின்சார கட்டமைப்புகளில் சைபர் தாக்குதல் மேற்கொள்ள சீன ஆதரவு ஹேக்கர்கள் திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடியில் உள்ள வவுசி துறைமுகம் மற்றும் மராட்டியத்தில் உள்ள மும்பை துறைமுகமும் சைபர் தாக்குதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ரெக்கார்டட் பியூச்சர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் மும்பையில் மின்சாரம் முடக்கப்பட்டதற்கு சைபர் தாக்குதல் காரணம் அல்ல என்றும் அது மனித தவறால் ஏற்பட்ட பாதிப்பு என்றும் விளக்கம் அளித்திருக்கக்கூடிய மின்துறை அமைச்சகம், சீனாவின் ரெட் எக்கோ சைபர் தாக்குதல் எச்சரிக்கையை அடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Mumbai , துறைமுகங்கள்
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!