×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபி மீதான வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும்

சென்னை: சிறப்பு டிஜிபி காரில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும், அவரை சஸ்பெண்ட் செய்ய கோரியும் 10 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டாக டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார். முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை சிறப்பு டிஜிபி ஒருவர் பாதுகாப்பு தொடர்பாக பேச வேண்டும் என்று தனது காரில் ஏற கூறி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் எஸ்பி அவரிடம் இருந்து தப்பித்து காரில் இருந்து வெளியே ஓடிவந்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிக்க தனது காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதை தெரிந்து கொண்ட சிறப்பு டிஜிபி தனது ஆதரவு செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் உதவியுடன் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வழிமறித்து சிறப்பு டிஜிபி மீது புகார் அளிக்க வேண்டாம் என்று சமாதானம் செய்துள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி, நான் கண்டிப்பாக உள்துறை செயலாளரிடம் புகார் அளிக்க தான் போகிறேன் என்று காரில் புறப்பட்டுள்ளார். அப்போது செங்கல்பட்டு எஸ்பி, பெண் அதிகாரியின் கார் சாவியை எடுத்து வைத்து கொண்டு புகார் அளிக்க கூடாது என்று மிரட்டல் வகையில் பேசியுள்ளார்.

ஆனால் அந்த மிரட்டலுக்கு அடிப்பணியாமல் பெண் அதிகாரி கார் சாவியை பிடிங்கி கொண்டு சென்னைக்கு வந்து புகார் அளித்தார். அதைதொடர்ந்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சிறப்பு டிஜிபி அதிரடியாக சட்டம் ஒழுங்கு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பாலியல் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் முதன்னை செயலாளர் ஜெய ரகுந்தன் தலையில் 6 பேர் கொண்டு விசாகா கமிட்டி அமைத்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டார்.
அதேநேரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு டிஜிபி செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதைதொடர்ந்து அவசர அவசரமாக டிஜிபி திரிபாதி பெண் எஸ்பி கொடுத்த புகாரின் படி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணை அதிகாரியாக முத்தரசி நியமித்தும் உத்தரவிடப்பட்டது. மேலும், பெண் எஸ்பி புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, தமிழகத்தில் பணியாற்றும் 10 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டாக நேற்று தமிழக டிஜிபி திரிபாதியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்று அளித்துள்ளனர்.  அந்த மனுவில், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் தொந்தரவு செய்த சிறப்பு டிஜிபி மீது இதுவரை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் மீது வழக்கு பதிவு மட்டும் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்படவில்லை. புகாருக்கு உள்ளான நபர் சிறப்பு டிஜிபி என்பதால் வழக்கு விசாரணை முறையாக நடைபெறும் என்பது சந்தேகமாக உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும், சிறப்பு டிஜிபிக்கு ஆதரவாக பெண் எஸ்பியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். அவரை உடனடியாக மாற்ற ேவண்டும்’.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருப்பாக உயர் போலீசார் தெரிவித்தனர்.


Tags : DGP ,CBI , Female IPS, sexual harassment, DGP, CBI
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...