மூடப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே மூடப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சிறுமயிலூர் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இங்கு, நெற்பயிர் அதிகமாக பயிரிடுவதால் அதே கிராமத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெல்கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. இதனால், நெல்மணிகளை விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

இதையொட்டி, சிறுமயிலூர் கிராமத்தில் மீண்டும் நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், நெல்கொள்முதல் நிலையம் திறக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமயிலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சூனாம்பேடு - தொழுப்பேடு சாலையில் திரண்டனர். அங்கு, சிறுமயிலூர் கிராமத்தில் உடனடினயாக நெல்கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, ‘நெல்கொள்முதல் நிலையம் திறக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலால், அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>