×

விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி சலுகையில் மோசடி, முறைகேடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமானது. யார் ஆட்சியில் அமரவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் விவசாயிகளுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. முதன்மையான துறை வேளாண்மை என்ற முறையில் ஆட்சியில் இருந்த அதிமுக என்ன செய்தது என்பது குறித்து பரிசீலிக்க பொருத்தமான நேரம் இந்த தேர்தல் காலம். நிலம் என்பது விவசாயிகளுக்கு உயிருக்கு நிகரானது. அதை இழப்பதற்கு அவர்கள் எப்போதுமே விரும்புவதில்லை. தங்களின் நில உரிமையை பாதுகாத்துக் கொள்ள உயிரைக் கொடுத்து போராடவும் தயாராக இருப்பவர்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் 1894ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 2013ம் ஆண்டு வரை இந்தியாவில் அந்த சட்டத்தை பயன்படுத்தித் தான் ஆட்சியாளர்கள் நிலத்தை கட்டாயப்படுத்தி விவசாயிகளிடமிருந்து பறித்து வந்தனர். அரசுக்கு வானளாவிய அதிகாரத்தை அளிக்கும் இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகளின் எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற்றன. ஆட்சியாளர்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இதன் விளைவாக, ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்துதல், வெளிப்படை தன்மை, நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்ற சட்டம் 2013 என்ற சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தில் சில குறைகள் இருந்தாலும், நில உரிமையாளர்களின் ஒப்புதலை கேட்பது, இழப்பீடு தீர்மானிப்பது, மறுவாழ்வு போன்ற அம்சங்கள் இதில் முக்கியமானது. விவசாயிகளின் நில உரிமைக்கு குறைந்தபட்ச பாதுகாப்பளிக்கும் இந்த சட்டத்திற்கு மாறாக, அதிமுக 27.2.2014ல் புதிய சட்டத்தை நிறைவேற்றியது. அதாவது 1894 பிரிட்டிஷ் சட்டத்தைப் போல, விவசாயிகளின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியமில்லை என்றது இச்சட்டம். இச்சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மீண்டும் 16.9.2020 அன்று நகர் ஊரமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

அதில், அரசு எந்தெந்த நிலங்களை கையகப்படுத்த இருக்கிறது என்ற விவரங்களை வெளியிட வேண்டியதில்லை. இரண்டாவது, நில உரிமையாளர்களிடம் கலந்து பேசாமலேயே அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம் என்பது. இது எதேச்சதிகாரமான, நில உரிமையை பறிக்கும் சட்டம் என்பதில் சந்தேகமில்லை. இழப்பீடு மட்டும் 2013ம் ஆண்டு சட்டப்படி வழங்கப்படும். நில உரிமையாளரின் பெயரில் பட்டா இருந்தாலும் அரசு நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அச்சத்திலேயே நில உரிமையாளர்கள் வாழ வேண்டிய கட்டாயத்தை அதிமுக அரசு உருவாக்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நிச்சயமாக இப்படி நடந்து கொள்ள முடியாது. மன்னர் ஆட்சியைப் போல அதிமுக அரசு நடந்து கொண்டுள்ளது.

இச்சட்டத்தின்படி எட்டுவழிச்சாலை, அரசின் வளர்ச்சி திட்டபணிகள், தொழிற்சாலைகள் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டால் கேள்வி எழுப்ப முடியாது. எனவே விவசாயிகளின் நில உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் இச்சட்டம் வாபஸ் பெறப்பட வேண்டும். அதிமுக ஆட்சி தொடர்ந்தால் விவசாயிகளின் நிலம் பறிபோகும் என்பதை உணர்ந்து விவசாயிகள் முடிவெடுக்க வேண்டும். விளை நிலங்களில் உயரழுத்த மின்கோபுரம் அமைப்பது, எரிவாயு குழாய் பதிப்பது, பெட்ரோலிய குழாய் பதிப்பது போன்ற பல திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. சம்பந்தப்பட்ட விவசாயிகளின் சம்மதமின்றி, உரிய இழப்பீடும் வழங்காமல் மாற்று வழிகளைப் பற்றி ஆலோசிக்கக்கூட முன்வராமல் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி திட்டத்தை நிறைவேற்ற மூர்க்கத்தனமாக அதிமுக அரசு நடந்து கொண்டதை நாமறிவோம். பல லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோவதைப் பற்றி கடுகளவும் கவலைப்படாத அரசாக அதிமுக இருக்கிறது. இதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

விவசாயிகளுக்கான பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில் மிகப்பெரும் மோசடி தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. பாஜ மற்றும் அதிமுகவை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் திட்டத்தில் பயன்பெற தகுதியற்ற பல லட்சக்கணக்கானோரை சேர்த்து, தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக பணத்தை பெற்றுக் கெண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வேளாண்மைதுறை அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர். கடும் எதிர்ப்புக்குப் பிறகு சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஏறத்தாழ ஏழு மாதங்கள் ஆன பிறகும் விசாரணை அறிக்கையை கூட வெளியிடாமல் மூடி மறைக்கும் செயலில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டத்தில் ஆளுங்கட்சியினரே, மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்றால் மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களில் எந்த அளவுக்கு கொள்ளையடித்திருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.

சிறு-குறு விவசாயிகளுக்கான திட்டம் என்று பிரதமரால் பெருமையாக பேசப்படும் இத்திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு - ஊழல் தொடர்பாக பிரதமரோ மத்திய அரசோ எந்தவித தலையீட்டையும் செய்யாததிலிருந்து அவர்களும் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தில் செயல்படுகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய அதிமுக-பாஜ தான் சேர்ந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதை வேளாண் பெருமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏரி குளங்களை தூர்வாருவது என்ற பெயரில் ஆண்டுதோறும் பலநூறு கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தூர்வார ஒதுக்கப்பட்ட தொகையில் மட்டுமல்லாமல் ஏரி-குளங்களில் எடுக்கப்பட்ட மண்ணை விற்று பெரும் பணம் சம்பாதித்துள்ளனர். எனவே எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதில் தங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்ற கணக்குகள் போட்டுத்தான் இவர்கள் செயல்பட்டனர் என்பது நாடறிந்த உண்மை.

கடந்த ஆண்டு இறுதியில் அடுத்தடுத்து இயற்கை இடர்பாடுகளுக்கு விவசாயிகள் உள்ளானார்கள். பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதற்குகொப்ப நிவிர்புயல், புரவி புயல் பாதிப்பு, ஜனவரி மாதம் எதிர்பாராமல் பெய்த அதிகனமழை என்று பயிர்களும்  அறுவடைக்கு தயாராக இருந்த நெல் உள்ளிட்ட பல பயிர்கள் முற்றிலும் அழிந்து போயின. இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை தள்ளுபடி செய்யவேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் வற்புறுத்தின. முதல்வரும் பிப்ரவரி 5ம் தேதி கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். 31.01.2021 வரை பெற்றுள்ள பயிர்க்கடன் 12110.24 கோடி ரூபாய் 16,43,347 விவசாயிகளுக்கு தள்ளுபடி என்று அறிவித்தார். இந்த கடன் தள்ளுபடி சலுகை பெரும்பகுதி விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு கடன் வழங்கப்படவே இல்லை. ஆனால், இதிலும் மோசடியும், முறைகேடும் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டிலேயே மிக அதிகம் பேர் பலனடைந்ததும், அதிக தொகை தள்ளுபடியானதும் சேலம் மாவட்டத்தில் என்பது அதிர்ச்சியான செய்தி. சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் மட்டும் 1,65,776 விவசாயிகள் 1356.03 கோடி தள்ளுபடி பெற்றுள்ளனர். மற்றொன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா சிங்கத்தா குறிச்சி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மொத்த கடன் தள்ளுபடி 1.5 கோடி. 27 பேருக்கு மட்டும். இதில் வங்கியின் தலைவர் குடும்பத்திற்கு தள்ளுபடி 31 லட்சம். செயலாளரின் குடும்பத்திற்கு தள்ளுபடி 15 லட்சம். மீதி 25 பேரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். முன் தேதியிட்டு கடன் வழங்குவது, ஆளுங்கட்சிகாரர்களுக்கு மட்டும் கடன் வழங்குவது, குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மோசடியாக கடன் பெறுவது போன்ற பல்வேறு வழிகளில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்திரவிடுவதற்கு கூட அதிமுக அரசு தயாராக இல்லை.

கூட்டுறவு வங்கியில் பாரபட்சமில்லாமல் கடன் தேவைப்படுகிற அனைவருக்கும் குறிப்பாக சிறு-குறு விவசாயிகளுக்கு அவசியம் கடன் வழங்க வேண்டும் என்பதற்கு பதிலாக, ஆளுங்கட்சியை சார்ந்தவர் தலைவராக இருந்தால் ஆளுங்கட்சியினருக்கு மட்டும் அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டும் கடன் வழங்கும் பாரபட்சமான அணுகுமுறையைத்தான் கடைபிடித்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக நாடு முழுவதும் விவசாயிகளால் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள வேளாண் விரோத சட்டங்களை ஆதரித்து பாராளுமன்றத்தில் வாக்களித்தது மட்டுமல்லாமல் விவசாயிகளை அடியோடு அழிக்கும் இந்த சட்டங்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பிரச்சார பீரங்கியாகவே தமிழக முதல்வர் பழனிசாமி செயல்பட்டதை மன்னிக்கவே முடியாது.

மின்சார திருத்த மசோதா 2021யை தற்போது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது மத்திய பாஜ அரசு. வரும் கூட்டத் தொடரில் சட்டமாக்குவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வருமானால் மாநில அரசுகள் ஏற்கனவே ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு, பல்வேறு சிறு தொழில்களுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரம் ரத்தாகும். ஆண்டுதோறும் மின்கட்டணம் கட்டாயம் உயரும். தமிழக விவசாயிகளின் எண்ணற்ற பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் நீண்டகாலமாக கிடப்பிலே போடப்பட்டுள்ளது. இப்போது நடக்கும் தேர்தல் அடுத்த ஐந்தாண்டுக்கான ஆட்சி அதிகாரத்தை வழங்கக் கூடியது. எனவே விவசாயிகள் நலனில், தமிழக முன்னேற்றத்தில் ஊழலற்ற, நேர்மையான கட்சிக்கு வாக்களிப்பது அவசியம். மக்களின் ஒற்றுமை மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் இந்த தேர்தலில் முக்கியமானதாகும். இதற்கு எதிரானதுதான் அதிமுக - பாஜ கூட்டணி என்பதை மனதில் கொண்டு மண்ணை கவ்வச் செய்வோம். விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டத்தில் ஆளுங்கட்சியினரே, மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்றால் மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களில் எந்த அளவுக்கு கொள்ளையடித்திருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.

Tags : Secretary General ,Tamil Nadu Farmers Association , Fraud and malpractice in loan waiver for farmers: General Secretary of Tamil Nadu Farmers Association P. Shanmugam
× RELATED உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்;...