மிஸ்டர் வாக்காளர்: மழை நீர் வடிகாலுக்கு கோரிக்கை வைத்தும் பலனில்லை: வேளச்சேரி கே. ராமமூர்த்தி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரமணி தந்தை பெரியார் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கையகப்படுத்தி அங்கு குடியிருந்த 2,200 பேருக்கும் அவர்கள் குடியிருந்த வீட்டு மனையை ஒதுக்கி தந்தனர். தற்போது அந்த பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் குடியிருந்து வரும் மனைகளுக்கான பணத்தை கட்டி முடித்துவிட்டனர். ஆனால் இதுவரை கிரைய பத்திரம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

மேலும் மழை காலத்தில் எங்கள் நகருக்கு பின்புறம் உள்ள குட்டையில் தண்ணீர் தேங்குவதால் அந்தத் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது. அதனால் அந்த தண்ணீர் ஊருக்குள் புகாதவாறு எங்கள் நகர்களை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்க வேண்டும் மற்றும் மழைநீர் தேங்காதவகையில் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும் என பலமுறை உயர் அதிகாரிகளை சந்தித்தும் அமைச்சர்களை சந்தித்தும் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த மழைக்காலத்தின் போது கூட துணைமுதல்வர் எங்கள் பகுதியை வந்து பார்த்து சென்றார் அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய இருவரும் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதற்காக எங்கள் பகுதி புறக்கணிக்கப்படுகிறது.

* நாங்கல்லாம் வேட்பாளர் இல்லை... கேட்பாளர் தான்...

நான் ஒரு சாதாரண தொண்டன். என்னைப்போல் நீங்களும் நாளை முதல்வர் ஆகலாம் என்று இபிஎஸ் ஒவ்வொரு முறையும் பிரைன்வாஷ் பண்ணியதால், முன் எப்போதும் இல்லாத வகையில் இலைகட்சியில் சீட் கேட்டு தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிஞ்சிருக்காங்க. இதில் ரூ.15 ஆயிரம் கொடுத்து விருப்ப மனுவை வாங்கின, 8,250 பேர் கட்டின தொகை மட்டும் ரூ.12 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம். எப்படியும் எம்எல்ஏ ஆகிவிடவேண்டும் என்ற ஆசையில் இருந்த தொண்டர்களுக்கு நேர்காணலில் அதிர்ச்சி மட்டுமே காத்திருந்ததாம். 5 மாவட்டத்துக்கு ஒரு பேட்ஜ் என்ற வகையில் அனைவரையும் மொத்தமாக வரவழைச்சாங்களாம். இதில் மாங்கனி மாவட்ட பேட்ஜ்சில் 712 பேருக்கு ஒரே நேரத்துல நேர்காணல் நடந்துச்சாம். சிட்டிங் எம்எல்ஏக்கள் உள்பட எல்லோரும் முண்டியடிச்சிக்கிட்டு ஓடிபோய் உட்காந்தாங்களாம்.

‘‘எல்லோரையும் தனித்தனியா அழைச்சு நேர்காணல் நடத்தணுமுன்னு தான் ஆசைப்பட்டேன். ஆனா இந்த தேர்தல் கமிஷன் திடீரென தேர்தல் தேதிய சொல்லிட்டாங்க. எனவே வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம். சிறப்பா செயல்படணும். நீங்கள் ஒவ்வொருவரும் வேட்பாளர் தான்’’ என்று முடிச்சாராம் முதல்வர் இபிஎஸ். அதையே ஓபிஎஸ்சும் சொல்ல... எல்லாமே 30 நிமிடத்துக்குள்ள முடிஞ்சுபோச்சாம். இதனால நேர்காணலுக்கு போன நாங்க எல்லோருமே அதிர்ச்சியடைஞ்சிட்டோம்னு புலம்பித்தள்ளிட்டாங்க. ‘‘எந்நாளும் நாங்கள் வேட்பாளராக முடியாது, கேட்பாளராகத்தான் இருக்கணும்,’’ என்று நொந்து போய் வந்தாங்களாம்.

Related Stories:

>