×

அனைவரின் குடும்பத்துக்குள்ளும் நோய் விளையாடிவிட்டு சென்றுள்ளது இனி தமிழகத்தில் கொரோனா விளையாடாத வகையில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்: மாஸ்க், தனிமனித இடைவெளி முக்கியம்; சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் அனைவரின் குடும்பத்திலும் கொரோனா விளையாடிவிட்டு சென்றுள்ளது. இனி மீண்டும் தமிழகத்தில் கொரோனா விளையாட அனுமதிக்க கூடாது. அதற்கு அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி கட்டுப்பாட்டு மையத்தை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியகுழு தடுப்பூசி மையங்களான, கிங் இன்ஸ்டியூட், அயனாவரம், சோழவரம், ஆவடி உள்பட பல பகுதிகளை பார்வையிட்டது. தடுப்பூசி எடுத்துச் செல்ல இந்தியன் ஆயில் நிறுவனம் இலவசமாக வெப்ரிடேட்டர் வாகனம் வழங்கி உள்ளது.  தமிழகத்துக்கு இதுவரை 27,84,330 தடுப்பூசி வந்துள்ளது. ஆரம்பத்தில் 3 ஆயிரமாக இருந்த தடுப்பூசி போடும் வேகம், தற்போது முதியவர்கள் 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களால் அதிகரித்துள்ளது. அதாவது நேற்று மட்டும் 66,337 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எந்த நேரமும் தடுப்பூசி போடப்படும். 3ல் ஒரு பங்கு அரசு இலவசமாக வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் அதிக இடங்களில் மாஸ்க் அணிவதில்லை. மேலும் 16 லட்சம் பேரிடம் இருந்து ரூ.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது அபராதம் விதிக்கும் துறை இல்லை. விடுபட்டவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். கொரோனா அனைவரின் குடும்பத்திற்குள் வந்து விளையாடி விட்டு சென்றுள்ளது. இனியும் வந்து விளையாடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதீர்கள். தேர்தல் பணி இருப்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் மிகவும் குறைந்துள்ளது இன்னும் ஒரு மாதம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மத்தியகுழு கூறியுள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

* குடும்பத்தில் கொத்து கொத்தாக பாசிட்டிவ்
சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, ‘‘தமிழகத்தில் 500க்கும் குறைவாக கொரோனா தொற்று பதிவானாலும் கோடம்பாக்கத்தில் 15 நாட்களில் 34 குடும்பங்களில் 80 பாசிட்டிவ், திருவொற்றியூரில் 2 குடும்பத்தில் 6  பாசிட்டிவ், மாதவரத்தில் 2 குடும்பத்தில் 6 பாசிட்டிவ், தண்டையார்பேட்டையில் ஒரு குடும்பத்தில் 9 பாசிட்டிவ், ராயபுரத்தில் 2 குடும்பத்தில் 16 பாசிட்டிவ், அயனாவரத்தில் 27 குடும்பத்தில் 58 பாசிட்டிவ், அம்பத்தூரில் 12 குடும்பத்தில் 32 பாசிட்டிவ், அண்ணாநகரில் 19 குடும்பத்தில் 51 பாசிட்டிவ், வளசரவாக்கத்தில் 21 குடும்பத்தில் 38 பாசிட்டிவ், தேனாம்பேட்டையில் 8 குடும்பத்தில் 25 பாசிட்டிவ், ஆலந்தூரில் 24 குடும்பத்தில் 33 பாசிட்டிவ், அடையாறில் 37 குடும்பத்தில் 82 பாசிட்டிவ், பெருங்குடியில் 18 குடும்பத்தில் 35 பாசிட்டிவ், சோழிங்கநல்லூர் 2 குடும்பத்தில் 9 பாசிட்டிவ் என கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் பாதிக்கப்படக் கூடிய 209 குடும்பங்களில் 409 பேரும் அவர்களுடைய தொடர்பில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கொரோனா விஷயத்தில் மாஸ்க் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

Tags : of Health , The disease has gone away in everyone's family. Interview with the Secretary of Health
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...