தேர்தல் விதிகளை மீறி பணியிட மாற்றம் செய்வதில் முறைகேடு ஊரக வளர்ச்சித் துறையில் மெகா ஊழல்: 56 உதவி இயக்குநர்கள் பதவிகளுக்கு பல கோடி வசூல்; தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் பட்டியல் வெளியிட அதிகாரிகள் திட்டம்

சென்னை: தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் தேர்தல் விதிகளை மீறி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தீவிரம் காட்டி வருவதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. 56 உதவி இயக்குனர் பதவிகளுக்கு டிரான்ஸ்பர் வழங்க பல கோடி ரூபாய் கைமாறியுள்ளது. பணியிட மாற்ற பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக திடீரென தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துவிட்டதால் அப் பட்டியல் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் பழைய தேதியிட்டு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளது. எனவே, இந்த டிரான்ஸ்பர் பட்டியல் முதலில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அனுமதி கொடுத்ததும் பட்டியலில் உள்ளவர்களுக்கு பணியிட மாற்றம் உடனடியாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  

தமிழகத்தில் அரசுத் துறைகளின் நிர்வாகத்தில் வருவாய்துறைக்கு அடுத்து ஊரக வளர்ச்சித் துறைதான் முதன்மைத் துறையாக உள்ளது. வருவாய்துறை, நிர்வாகம் முழுவதையும் கவனிக்கிறது என்றால் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை 38 மாவட்டங்கள் உள்ளன. ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் அந்தஸ்தில் உதவி இயக்குநர் (கிராம ஊராட்சி), உதவி இயக்குநர் (தணிக்கை) மாவட்ட ஊராட்சி செயலாளர், நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி), நேர்முக உதவியாளர் (சத்துணவு), நேர்முக உதவியாளர் (தேர்தல்), நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) உள்ளிட்ட பணியிடங்கள் கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் உள்ளன. இதுதவிர ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட திட்ட இயக்குநரின் கீழ் உதவி திட்ட அலுவலர் அந்தஸ்தில் பல்வேறு பணியிடங்கள் உள்ளன. எனினும் கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சி, தணிக்கை), மாவட்ட ஊராட்சி செயலாளர் ஆகிய பணியிடங்கள் மட்டுமே ‘‘பசையுள்ள’’ பதவிகளாகும்.

இந்த பதவிகளுக்கு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தவர்கள், உதவியாளர், துணை பிடிஓ, பிடிஓக்களாக பணியாற்றியவர்கள் பதவி உயர்வு அடிப்படையில் உதவி இயக்குநர்களாக வருவர். மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களும் நேரடியாக உதவி இயக்குநர் பணியில் சேரலாம். உதவி இயக்குநர் ஊராட்சியின் கீழ்தான் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் வருகின்றன. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக, தமிழகம் முழுவதும் 131 உதவி இயக்குநர்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதில் பல அதிகாரிகள் பல ஆண்டுகளாக ஒரே இடங்களில் பணியாற்றியவர்கள். இந்த மாறுதலில் பெரிய அளவில் பணம் விளையாடியதாக கூறப்பட்டது. இதற்கு அடுத்தும் உதவி இயக்குநர்கள் மாற்றத்திற்காக பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது. அதாவது, மார்ச் முதல் வாரத்தில் தான் தேர்தல் அறிவிப்பு வெளியாகும். எனவே அதற்கு முன்னதாக 56 உதவி இயக்குநர்களை மாற்றம் செய்து விடலாம் என கோட்டையில் உள்ள மேலிடத்தில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு பட்டியலில் உள்ளவர்களிடம் பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எதிர்பார்ப்பிற்கு முன்னதாக பிப்.26ம் தேதியே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் உதவி இயக்குநர் பணியிட மாற்றம் உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் தற்போது 56 உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றத்திற்கான பட்டியல் தயார் நிலையில் உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் இந்த பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஊரக வளர்ச்சித் துறையில் பகிரங்கமாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக தேர்தல் பணிகளை பொறுத்தவரை வருவாய் துறையினர் தான் கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக தான் ஊரக வளர்சித் துறையினர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அதுவும் உதவி இயக்குநர் நிலையிலான அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளில் பெரிய அளவில் பங்கு இருக்காது. எனவே எந்த காரணத்தை சொல்லி தேர்தல் ஆணையத்தில் உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றத்திற்கு ஒப்புதல் பெற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயம் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேட்ச் பிக்சிங் இல்லை... ரேட் பிக்சிங்: ஊரக வளர்ச்சித் துறையில்  திட்டங்களை செயல்படுத்துதல், ஆய்வு செய்தல், சாலை, குடிநீர், சொத்து வரி வசூல் கண்காணித்தல் என அனைத்து பணிகளையும் கண்காணிப்பது உதவி இயக்குநரின் பணியாகும். இதனால் இந்தப்பணி தான் உதவி இயக்குநர் அந்தஸ்தில் முதன்மை பணியாக கருதப்படுகிறது. இதற்கு அடுத்து உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகும். ஊராட்சிகளில் வரவு, செலவு இனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வது தணிக்கை உதவி இயக்குநரின் பணியாகும்.

அடுத்து மாவட்ட ஊராட்சிக்கு அதிக நிதி கிடைப்பதால் அந்த அதிகாரிக்கும் வெயிட் அதிகம். இதனால் ஊரக வளர்ச்சித் துறையில் இந்த மூன்று பணியிடங்களை பிடிக்க அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். இதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு ரேட் உண்டு. அதை பூர்த்தி செய்தால் மட்டுமே குறிப்பிட்ட மாவட்டத்திற்கு, குறிப்பிட்ட இடத்திற்கு பதவி கிடைக்கும். அதிக பணம் அளிக்கும் அதிகாரிக்கு பெரிய மற்றும் அதிக நிதி ஒதுக்கீடு வரும் மாவட்டம், ஒன்றியங்கள் ஒதுக்கப்படும்.

* சென்னைக்கு அதிகம்

தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உதவி இயக்குநர் (ஊராட்சி) பணியிட மாற்றத்திற்கு ரூ.20 லட்சமாம். ஏனெனில் இந்த மாவட்டங்கள் சென்னையை ஒட்டி அமைந்துள்ளது என்பதால் வணிக வளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகம். இதற்கு அனுமதி தருவது, சொத்து வரி நிர்ணயம் என அனைத்தும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் வருவதால் பணம் அதிகம் புரளுமாம். இதனால் தான் இந்த மாவட்டங்களுக்கு ரேட் அதிகமாம்.

* மாவட்டங்களுக்கு எவ்வளவு ரேட்

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (ஊராட்சி) பணியிட மாற்றத்திற்கு தான் அதிக ரேட். ஏனெனில் இது தான் பசையுள்ள பணியிடமாம். இந்த பணியிட மாற்றத்திற்கு சிறிய மாவட்டங்களுக்கு ரூ.10 லட்சமும், பெரிய மாவட்டங்களுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இதற்கு அடுத்து உதவி இயக்குநர் (தணிக்கை) பணியிட மாற்றத்திற்கு ரூ.8 லட்சமும், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் பணியிட மாற்றத்திற்கு ரூ.5 லட்சமும் என பகிரங்கமாக விலை பேசப்படுகிறது.

* வசூல் ராஜாக்கள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியிட மாற்றம் விரும்பும் அதிகாரிகளிடம் தொகை கறக்க ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகள் சிலர் புரோக்கர்களாக உள்ளனர். இவர்கள் கறந்த தொகையை அப்படியே அந்தத் துறையின் மேலிடத்திற்கு பரிமாற்றம் செய்வர். அதன் பிறகு தான் பணியிட மாற்றம் ஆணை வரும்.

* உள்ளாட்சி தேர்தல் பெயரில் கொள்ளை...

உள்ளாட்சி தேர்தல் நடத்த தேவையான பொருட்களை மாநில தேர்தல் ஆணையத்துக்கு வாங்கித் தர வேண்டும். அதில் கூட 10 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 50 ரூபாய் என்று வாங்கி பில் போட்டு பணத்தை சுருட்டுகின்னர்.

* உள்ளாட்சி துறையின் கீழ் வரும் இலாகா எவை?

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர் வழங்கல், சிறப்புத் திட்ட செயலாக்கம்.

* போடாத சாலைகள்... பாஸாகும் பில்கள்

தமிழகத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபோது பஸ்சே செல்லாத குக்கிராமத்துக்கும் சாலை வசதிகளை ஏற்படுத்தினார். மண்சாலை, தார்சாலை, ஒருவழி சாலைகள் அதிகம் கலைஞர் காலத்தில் அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு கல் பெயர்ந்து செம்மண் சேலையில் ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு சாலைகளின் தரம் உள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்களில் பலருக்கு ஆர்டிஐ, படிக்க தெரியாதவர்களாக உள்ளனர். பல கிலோ மீட்டர் நடந்து மெயின் ரோட்டுக்கு வந்து பஸ் பிடிப்பவர்கள். இந்த சாலைகளின் பெயர்களில் பில் போட்டு எடுக்கப்பட்டுள்ள பணம் மட்டும் பல கோடியாம். இவை அதிகாரிகள், ஒன்றிய தலைவர்கள், வார்டு கவுன்சிலர்களுக்கு மட்டுமே தெரியும். எழுத்துவடிவில் மட்டுமே சாலை போடப்பட்டு இருக்கும். பணம் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பாக்கெட்டை நிரப்பி இருக்கும்.

* சிறப்பு திட்டமா... கமிஷன் திட்டமா.

தமிழகத்தில் மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், பொங்கல் தொகுப்பு உள்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை உள்ளாட்சி துறை தான் செயல்படுத்தி வருகிறது. மற்ற துறைகளில் லட்சங்கள் கோடியாகும்... ஆனால் இந்த துறையில் டீலிங்கே கோடியில் தான் துவங்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். காரணம் எம்என்சி, கார்ப்பரேட் மற்றும் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கோடி கொட்டி கொடுத்து சிறப்பு திட்டத்தில் டெண்டர் எடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

* கை சுத்தம் இல்லாத சுகாதார அதிகாரிகள்

மாநகராட்சி பகுதிகள் அனைத்தும் தனி அதிகாரிகளின் கையில் இருப்பதால் சுகாதார துறை அதிகாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு நினைத்த ஓட்டல்கள், கடைகளில் புகுந்தும் தண்ணீர் பாட்டில், சுவீட், பேக்கிங் பொருட்கள் என்று ஏதாவது ஒன்றை கையில் எடுத்து அபாராதம் விதிக்கின்றனர். அபராதத்தை தடுக்க வேண்டுமானால் சில ஆயிரங்களை கொடுத்தால் போதும் அடுத்த ஆறு மாததத்துக்கு அந்த சுத்தமான கைகளுக்கு சொந்தக்காரர்கள் ஓட்டல் பக்கமே வர மாட்டார்களாம்.

* ஸ்பெஷலாக கவனிக்கும் அதிகாரி?

மாநகரம், நகராட்சி பகுதிகளில் தேர்தலே நடக்கவில்லை. அனைத்து பணிகளையும் தனி அலுவலர்களே (ஸ்பெஷல் ஆபிசர்ஸ்) பார்த்து வருகின்றனர். தொடர்ந்து ஆறு மாத பணி நீட்டிப்பில் இருந்து வருகின்றனர். வணிகர்களை, அப்பாவி மக்களை சித்தரவதை செய்து வரி வசூல் செய்கின்றனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கடைகளை குறைந்த கட்டணம் நிர்ணயித்து துணைபோகின்றனர். ஏலம் முதல் அடிப்படை வசதிகள் வரை அனைத்துக்கும் இவர்கள் மூலம் தான் கோட்டைக்கு கரன்சி இறக்கை கட்டி பறக்கிறது. இதில் சமீபத்தில் வேலூரில் கூட  மாநகராட்சி அதிகாரி ஒருவர் சிக்கினார்.

* கொரோனா கால விருதுகள்

கொரோனா காலத்தில் நகரங்களை பெரிய அளவில் மந்திரிகளும், அதிகாரிகளும் கண்டு கொண்டனர். ஆனால் கொரோனா காலத்தில் சானிடைசர், மாஸ்க், பிளிச்சிங் பவுடர், விழிப்புணர்வு தட்டிகள், கொசு மருந்து அடிப்பது மற்றும் சுகாதாரமான முறையில் கிராமங்களை பாதுகாப்பது என்ற பெயரில் அடிக்கப்பட்ட கரன்சிகள் மட்டும் பல மூட்டைகளில் கட்டலாம். அப்படி வந்த பணத்தை முறையாக உரியவர்களிடம் சேர்த்தவர்களுக்கு விருது என்ற பெயரில் உரிய கமிஷன் தரப்பட்டுள்ளதாம்.

* வடை போச்சே!

உதவி இயக்குநர்கள் 131 பேர் இடமாற்றத்தில் சில மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் டம்மி பதவியில் இருந்து அதிக பசையுள்ள பதவியை பிடிக்க கடந்த மாதம் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியிட மாற்றம் கிடைக்காத நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டதால் தற்போது பணியிட மாற்றம் கிடைக்குமா? கொடுத்த தொகை திரும்ப வருமா என்ற பதைபதைப்பில் உள்ளனர்.

* வாய்ச்சவடால்

உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றத்திற்கு பேரம் பேசும் முக்கிய புள்ளிகளிடம் தற்போது தேர்தல் அறிவிப்பு வந்து விட்டதே, பணியிட மாற்றம் கிடைக்காமல் போனால் பணம் போச்சே என கேட்கும் அதிகாரிகளிடம், அடுத்தும் நாம் தான், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என புரோக்கர்கள் வாய்ச்சவடால் விடுகின்றனர்.

Related Stories:

>