×

திமுக கூட்டணியில் ஒதுக்கீடு விடுதலை சிறுத்தைகளுக்கு 6 தொகுதி: மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், கொமதேகவுடன் பேச்சுவார்த்தை

சென்னை: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், கொமதேகவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. திமுகவை பொறுத்தவரை நேர்காணல் நடத்தி வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது. திமுக முதல் கட்டமாக தங்களது கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மமகவுக்கு 2 இடங்களும் ஒதுக்கியுள்ளது. தொடர்ந்து திமுக தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கே..என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு அடங்கிய தொகுதி பங்கீடு குழுவினர் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், டி.ரவிக்குமார், எம்.பி., பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தமிழகத்தில் 6 (ஆறு) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: திமுகவுடன் தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளை பங்கிட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கால அரசியலை கருத்தில் கொண்டும் திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் தொடர்வது தான், முதன்மையானது. மதசார்பற்ற சக்திகளின் வாக்குகள் எந்த காலத்தை முன்னிட்டும் சிதறிவிடக்கூடாது. அப்படி சிதறுவதற்கு எந்த காரணத்திற்காகவும் நாங்கள் காரணமாக இருந்து விடக்கூடாது. இடம் தந்து விடக்கூடாது என்கிற அடிப்படையில். சனாதன சக்திகளை தமிழ்நாட்டில் இருந்து முற்றாக விரட்டி அடிக்க வேண்டும் என்ற ஒரு கொள்கை உறுதிப்பாட்டின் அடிப்படையில் விசிக தொகுதி உடன்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறோம்.

அவர்கள் அதிமுகவோடு பழகிக்கொண்டு அதிமுகவை, இல்லாது அழித்து ஒழித்து விட வேண்டும் என்கிற, மறைமுக செயல்திட்டத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதனை அவ்வப்போது அதிமுகவுக்கு நாங்கள் சுட்டி காட்டி இருக்கிறோம். என்ஆர் காங்கிரஸ் உடன் நட்பு பாராட்டி கொண்டே, பாண்டிச்சேரி பொறுப்பாளர்களை, உறுப்பினர்களை தங்களது கட்சியிலே சேர்க்கிறார்கள். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்ய இருக்கிறோம். நாங்கள் 6 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றார்.

மேலும் திமுக குழுவினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, சுப்புராயன், துணைச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு முத்தரசன் அளித்த பேட்டி: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகிக்கிறது. நடைபெற இருக்கிற தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து முதல் கட்டமாக கடந்த 2ம் தேதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. 2வது கட்டமாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மிக சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. எங்களுடைய கமிட்டியில் ஒப்புதல் பெற்று நாளை(இன்று) தொகுதி ஒதுக்கீட்டில் கையெழுத்திடப்படும். பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை என்றார்.

அதே போல் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா அளித்த பேட்டி: தமிழகத்தை சூழ்ந்து இருக்கிற பேராபத்தில் இருந்து தமிழகத்தை மீட்கின்ற கடமை திராவிட இயக்கத்திற்கு இருக்கிறது. அந்த கருத்தின் அடிப்படையில் தான் மதிமுக திமுகவுடன் தோழமை கட்சியாக இருக்கிறது. கொள்கை சார்ந்து இருக்கிற மதிமுக திமுகவுடன் இணைந்த சிந்தனை ஓட்டத்தில் தான் இருக்கிறோம். மதிமுக பரந்து விரிந்து இருக்கிற இயக்கம். இந்த இயக்கத்திற்கான அங்கீகாரத்தை தந்து விடுங்கள் என்ற வேண்டுகோளை நாங்கள் வைத்திருக்கிறோம். அந்த வேண்டுகோளை பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்” என்றார்.

அதே போல் திமுக கொங்குநாடு மக்கள்  தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் கொமக பொது செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு ஈஸ்வரன் அளித்த பேட்டி:
எங்களுடைய தேவைகளை அவர்களிடத்தில் சொல்லியிருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் உள்ள பிரச்னைகளை எல்லாம் எடுத்து சொல்லியிருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இம்முறை வெற்றி பெற்றாக  வேண்டும் என்பதை அழுத்தம், திருத்தமாக சொல்லியிருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டு, திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் தொடர்வது தான் முதன்மையானது. மதசார்பற்ற சக்திகளின் வாக்குகள் எந்த காரணத்தை முன்னிட்டும் சிதறிவிடக்கூடாது.

* தொழிலாளர் நலன்காக்க துணை நிற்போம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு: பட்டாசு ஆலையில் உயிரிழப்புகளும் பலதரப்பட்ட ஆலைகளின் கதவடைப்புகளும் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகின்றன. உற்பத்தி - பொருளாதார வளர்ச்சி - நாட்டின் முன்னேற்றம் இவற்றில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடத் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு நாளான இன்று (மார்ச் 4) வலியுறுத்துகிறேன். தொழிலாளர் நலன் காக்க எந்நாளும் துணை நிற்போம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : Liberation Tigers of Tamil Eelam ,LTTE ,Madhimuga ,Communist Party of India , Allotment to the Liberation Tigers of Tamil Nadu in the 6th constituency: Negotiations with Madhimuga, Communist Party of India, Comadeka
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க.....