சக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.!!!

வெலிங்டன்: நியூசிலாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு பசுபிக் கடலில் நியூ கலிடோனியாவின் கிழக்கு பகுதியில் இருந்து 415 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்கடலில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவானதால் சுனாமி அலைகள் எழக்கூடும் என்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி, வனுட்டு ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைவாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது. 7.7. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், நிச்சயம் சுனாமி அலைகளை எதிர்பார்க்கலாம். ஆதலால், கடற்பகுதிகள், துறைமுகங்கள், ஆறுகள், கடல்முகத்துவாரங்களில் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரித்தது. சுனாமி அலைகள் கடலில் உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆஸ்திரேலிய வானிலை மையமும் தெரிவித்தது.

இருப்பினும் எதிர்பார்த்தபடி கடலில் பேரலைகள் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து, வடக்கு கிரேட் பேரியர் தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறுவதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. தொடர்ந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் சுனாமி எச்சரிக்கையை திரும்ப பெற்றுள்ளது. இருப்பினும், மக்கள் கடல் பகுதிக்கு செல்லாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, நியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நியூசிலாந்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>