×

ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபல் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீ!: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பட்நாயக் உத்தரவு..!!

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபல் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால் தீயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபல் சரணாலயத்தில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அம்மாநில தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட சிமிலிபல் சரணாலயம் 2750 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிய அளவில் ஏற்பட்ட காட்டுத்தீ, காற்றின் வேகம் காரணமாக மற்ற இடங்களுக்கும் பரவி வருகிறது. இதில் ஏராளமான அரியவகை மரங்கள் கருகிவிட்டன. பல்வேறு வன விலங்குகளும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 5 மாவட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர். தாகூர் முண்டா, நவுனா, சர்கோஷியா, ரஸ்கொவிண்பூர், மோரோடா உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஏராளமான நிலப்பரப்பை காட்டுத்தீ சாம்பலாக்கி வருகிறது.

ஆண்டுதோறும் ஏற்படும் காட்டுதீயால் ஏராளமான வனப்பகுதி அழிவது தெரிந்தும் ஒடிசா மாநில அரசு அமைதி காப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக வேட்டையாடும் கும்பல் தான் தீ வைத்துள்ளதாக விலங்கின ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த காட்டுத்தீயால் இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் தீயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Similipal forest ,Odisha ,Chief Minister ,Patnaik , Odisha, Similipal Forest, Wildfire
× RELATED ஒடிசா, சிக்கிமை தொடர்ந்து பஞ்சாபிலும்...