அமமுக பிரமுகரின் சகோதரருக்கு சொந்தமான தியேட்டர், அலுவலகங்களில் வருமானவரித் துறை ரெய்டு: மதுரை, தேனியில் அதிரடி

மதுரை: உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள தியேட்டர்கள், கட்டுமான நிறுவனம், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அமமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், உசிலம்பட்டி முன்னாள் எம்எம்ஏ மகேந்திரன். இவரது சகோதரரும், அரசு ஒப்பந்ததாரருமான வெற்றிக்கு சொந்தமான மதுரை ஐராவதநல்லூரில் இயங்கிவரும் கட்டுமான நிறுவனம், மதுரை வில்லாபுரத்தில் உள்ள சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க் மற்றும் தேனி, போடி உள்ளிட்ட வெற்றிக்குச் சொந்தமான 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

தேனி பழனிசெட்டிபட்டியில் பூதிப்புரம் சாலையில் காம்ப்ளக்ஸ் தியேட்டர் உள்ளது. இங்கு 4 திரையரங்குகள் உள்ளன. நேற்று மதியம் மதுரை வருமான வரித்துறை அலுவலர் அம்பேத்கர் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் தியேட்டரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆன்லைன் புக்கிங், டிக்கட் கட்டண வருமானம் குறித்தும் ஆய்வு நடத்தியதாக தெரிகிறது. சுமார் 4 மணிநேரம் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு வரைஇந்த  சோதனை நீடித்தது.

சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12  குழுக்களாக சென்று இச்சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சோதனைகளில் முக்கிய ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories:

>