10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு வலுக்கிறது எதிர்ப்பு; வீதிகள், வீடுகளில் கருப்புக்கொடி; மாணவர்கள் தர்ணா போராட்டம்: திருவில்லிபுத்தூர், கடலாடி, நெல்லையில் கொந்தளிப்பு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை கண்டித்து திருவில்லிபுத்தூர்,கடலாடி, நெல்லை பகுதிகளில் மக்கள் வீதிகள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், கடலாடியில் மாணவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு சமீபத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 93 சாதியினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, ஆனால் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது சமூக அநீதி என தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகரில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று மறவர் மகாசபை, மறவர் நலக்கூட்டமைப்பு, தேவர் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் பகுதி முழுவதும் உள்ள தெருக்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது. மேலும் வீடுகள்,  முக்கிய சந்திப்புகளிலும் நேற்று கருப்புக்ெகாடி கட்டப்பட்டிருந்தது. திருவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் பகுதியிலும் முக்கிய இடங்களில் கருப்புக் கொடி கட்டி தமிழக அரசுக்கு  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பூவந்தியில், பசும்பொன் தேசிய கழக மேற்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் வீடுகள், மின்கம்பங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் தர்ணா: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரசை கண்டித்தும், டிஎன்டி பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடை அதிகரித்து வழங்கக்கோரியும், வகுப்புகளை புறக்கணித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மாணவர்களிடம் முதுகுளத்தூர் டிஎஸ்பி ராகவேந்திர கேரவி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அவரிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். நெல்லை: நெல்லை தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணக்காடு கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டன. மேலும் திம்மராஜபுரம் கோட்டூர் பசும்பொன்நகரில் மின்விளக்கு கம்பங்கள் மற்றும் வீதிகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. தேர்தலை கருத்திக் கொண்டு உள் இட ஒதுக்கீடு அவசர, அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் மூலமே பதிலடி கொடுப்போம் என போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் தெரிவித்தனர். நாங்குநேரி வட்டம் ஆனையப்பபுரம், மறுகால்குறிச்சி, மஞ்சங்குளம், சூரங்குடி, சங்கரன்கோவில் அடுத்துள்ள உறுமன்குளம், கழுகுமலை என முக்குலத்தோர்  சமுதாயத்தினர் அதிகம் வாழும் பெரும்பாலான ஊர்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

முக்குலத்தோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் முடிவெடுத்துள்ளனர். கடந்த முறை அதிகம் ஆதரவு அளித்த முக்குலத்தோர் தற்போது தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் அதிமுகவினர் கலக்கமடைந்துள்ளனர். தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில், ஆளுங்கட்சியை கண்டித்து பொதுமக்கள், மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிச்சை எடுக்க வைத்த அதிமுகவுக்கு ஓட்டு இல்லை: சமூகத் தலைவர் ஆடியோ

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு எதிர்த்து தென் மாவட்டங்களில் சீர்மரபினர் மக்கள்  வாழக்கூடிய பகுதிகளில் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில்  சீர்மரபினர் நலச்சங்க தேனி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி பேசிய ஆடியோ, நேற்று தேனி மாவட்டம் முழுவதும் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், ‘‘அனைத்து  ஊர்களிலும் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி கட்டி நமது எதிர்ப்புகளை  தெரியப்படுத்த வேண்டும். அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம். அதிமுக நமது  பிள்ளைகளை எதிர்காலத்தில் பிச்சை எடுக்க வைத்துள்ளது. இதனை நன்றாக புரிந்து  தெரிந்து செயல்படுங்கள். இதை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்’’ என்பதாக  ஆடியோ உரையாடல் உள்ளது. இந்த ஆடியோ ேதனி மாவட்ட அதிமுகவினரிடையே பெரும்  கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>