×

அதிமுகவில் வேட்பாளர் பட்டியல் ரகசியமாக தயாரானது: 5 அமைச்சர்கள் உட்பட 40 எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை

* 8 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் நேர்காணல் கண்துடைப்பு
* விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் அதிர்ச்சி

சென்னை: அதிமுகவில் சீட் கேட்டு 8,174 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் அனைவரிடமும் இன்று ஒரே நாளில் நேர்காணல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கப்படும் தொகுதிகளின் பட்டியல் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாஜவுக்கு 21 தொகுதிகளை ஒதுக்க தயாராக இருந்தது. பின்னர் கூட்டணியில் பிடிவாதம் காட்டியதால் தற்போது 30 தொகுதிகள் வரை வழங்க அதிமுக தலைமை தயாராக உள்ளதாக கூறியுள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவாகவில்லை.

எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதும் முடிவாகவில்லை. மேலும் தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சிகளுடன் அதிமுக இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவே இல்லை. இவ்வாறு கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம், எந்தெந்த தொகுதிகள் என்று முடிவாகாத நிலையில், தமிழகத்தில் உள்ள 234 ெதாகுதிகள் மற்றும் புதுவை, கேரளா மாநிலங்களை சேர்ந்த அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்வது நேற்றுடன் முடிந்தது. அதில் 8,174 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா இருந்தபோது, விருப்ப மனு தாக்கல் செய்தவுடன் மூத்த தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம்,

கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நேர்காணல் நடத்துவார்கள். அவர்கள் கொடுத்த பட்டியலில் இருந்து குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் ஜெயலலிதா அழைத்துப் பேசுவார். குறிப்பாக ஒரு தொகுதிக்கு 2 பேர் முதல் 4 பேர் வரை பேசுவார். பின்னர் தன்னிடம் உள்ள உளவுத்துறை அளித்த பட்டியல் மற்றும் கட்சியினர் அளித்த பட்டியல், சசிகலா கொடுக்கும் பட்டியல் என எல்லா பட்டியலையும் ஆய்வு செய்து அவர் இறுதி பட்டியல் தயாரித்து வெளியிடுவார். ஆனால் ஜெயலலிதா காலத்தில் கூட விருப்ப மனு தாக்கல் செய்த ஆயிரக்கணக்கானோரிடம் ஒரே நாளில் நேர் காணல் நடத்தியது இல்லை.

ஆனால், தற்போது அதிமுக இன்று ஒரே நாளில் நேர்காணலை நடத்துகிறது. இது வெறும் கண்துடைப்பு என்று விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் கூறுகின்றனர். அதிமுகவில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. அவர்களை தவிர கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் தனி அணியாக உள்ளனர். கோவையில் அமைச்சர் வேலுமணியும், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் தங்கமணியும் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இந்த அணிகளின் மோதலுக்கிடையேயும், எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் பட்டியலை தயாரித்து விட்டாராம்.

அதில் கூட்டணி கேட்கும் தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளுக்கான பட்டியலை உடனடியாக வெளியிடவும் தயாராக உள்ளாராம். இந்தப் பட்டியலை முதல்வர் எடப்பாடிக்காக வேலை செய்ய நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி, சுனில் தலைமையிலான இந்த ‘‘எஸ்எம்எஸ்’’ என்று அழைக்கப்படும் டீம் தான் பட்டியலை தயாரித்துள்ளதாம். அந்த பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி என்று எந்த மூத்த தலைவர்களின் பரிந்துரையோ, மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைகளையோ கேட்காமல் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இருவர் குறித்தும் உளவுத்துறையிடம் அறிக்கை கேட்டுப் பெறப்பட்டுள்ளது. உளவுத்துறை அந்த 2 பேர் குறித்தும் உள்ளூரில் விசாரித்து அறிக்கையை அளித்துள்ளனர். அந்த அறிக்கையின்படி, வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் 5 அமைச்சர்கள், 40 எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதில் 3 பெண் அமைச்சர்களுக்கும் இந்த முறை சீட் மறுக்கப்பட்டுள்ளதாம். அதைத் தவிர, மேற்கு மண்டலத்தில் ஒரு அமைச்சர், மத்திய மண்டலத்தில் உள்ள ஒரு அமைச்சருக்கு சீட் இல்லையாம்.

தற்போது எம்எல்ஏக்களாக உள்ள தி.நகர் சத்யா, விருகை ரவி ஆகியோருக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லையாம். விருகம்பாக்கத்தை தேமுதிகவுக்கும், தி.நகரை பாஜகவுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதோடு கோவையில் கிணத்துக்கடவு, கோவை தெற்கு, ராமநாதபுரம், வில்லிபுத்தூர், ரங்கம், திருத்தணி உள்பட தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகள் பாஜகவுக்கு வழங்கப்பட உள்ளதாம். இதனால் அவர்களுக்கு சீட் இல்லை என்று தலைமை கைவிரிக்க உள்ளதாம். இதேபோல, தமிழகம் முழுவதும் 40 எம்எல்ஏக்களுக்கு சீட் இந்த முறை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி அதிமுகவில் முழுமையான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இன்று நேர்காணல் நடத்துவது வெறும் கண்துடைப்புதானாம். இதனால் மூத்த தலைவர்கள், அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட்டியல் வெளியானதும் அதிமுகவுக்குள் பெரிய அளவில் மோதல் வெடிக்கலாம் என்றும் குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி தரப்பில், தகுதியுள்ளவர்களுக்குத்தான் சீட் வழங்கப்படுகிறது, யாருடைய ஆதரவாளர்கள் என்று பார்க்காமல் தகுதி உள்ளவர்கள் என்று பார்த்துதான் சீட் வழங்கப்படும்.

இந்த முறை செலவு முழுவதையும் எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆதரவு அமைச்சர்கள்தான் கவனிக்கின்றனர். இதனால் அவர்கள்தான் சீட் குறித்து முடிவு எடுப்பார்கள் என்று கூறுகின்றனர். அதேநேரம் மேற்கு மண்டலத்தில் பல தோற்கும் வேட்பாளர்களுக்கும் சீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த தகவல்கள் தற்போது அதிமுக வட்டாரத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பட்டியல் வெளியான பிறகு மாநிலம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை அதிமுகவில் அது ஏற்படுத்தும் என்கின்றனர் அதிமுக முன்னணி தலைவர்கள்.

8,174 நிமிடம் நடக்குமா?
அதிமுகவில் 8174 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். ஒருவருக்கு ஒரு நிமிடம் நேர் காணல் நடத்தினாலும், 8,174 நிமிடம் ஆகும். அதாவது, 136 மணி நேரம் ஆகும். இந்த மணி நேரம் என்பது ஐந்தரை நாட்களாகும். ஆனால் இன்று ஒரே நாளில் அதாவது சுமார் 8 மணி நேரத்துக்குள் நேர்காணலை முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பார்த்தால், ஒரு தொகுதிக்கு விருப்பமனு தாக்கல் செய்தவர்களை மொத்தமாக அழைத்து ஒரே இடத்தில் அமரவைத்து, அங்கு நேர்காணல் நடத்துபவர்கள் வந்து மொத்தமாக ஆலோசனைகளை மட்டுமே கூறி எல்லோரையும் அனுப்பி வைக்கத்தான் முடியும். இதைத்தான் விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் கண் துடைப்பு என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

ஓபிஎஸ் மகன் பெயரில் 100 மனு
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத், தேனி எம்பியாக உள்ளார். தற்போது அவரது இளைய மகன் ஜெயபிரதீப்பும் அரசியலில் குதித்துள்ளார். அவரது பெயரில் தேனி மாவட்டம் கம்பம், சென்னையில் விருகம்பாக்கம், கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் 100 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் கம்பம் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் ஜக்கையன். இவர், ஆரம்பத்தில் சசிகலா ஆதரவாளராக இருந்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளராக மாறி, தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார். அவரது தொகுதிக்கு ஜெயபிரதீப் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : The AIADMK candidate list is secretly prepared: 40 MLAs, including 5 ministers, have no seats
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்