பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை பாலியல் தடுப்பு சட்டத்தை உத்வேகமாக பின்பற்ற வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: பணியிடத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுவதை தடுக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தடுப்பு சட்டத்தை உத்வேகத்தோடு பின்பற்ற வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் பொதுப்பணித்துறையில், வைப்பாறு வடிநில கோட்டத்தில் உதவி நிர்வாக இன்ஜினியராக பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். அந்த பெண்ணுக்கு, அதே துறையில் பணியாற்றி வந்த அதிகாரிகள் சிலர் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் அதிகாரி, 2016ம் ஆண்டு புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து அந்த பெண் அதிகாரியின் தந்தை, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் ஆணையத்தின் உறுப்பினர் சித்த ரஞ்சன் மோகன்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த அவர், இந்த விவகாரத்தில் பெண் அதிகாரிக்கு எதிராக அதிகாரிகள் நடந்துகொண்டது மற்றும் அவர்களின் அணுகுமுறைக்கு ஆணையம் கடுமையான கண்டனத்தை  தெரிவிக்கிறது. அதேவேளையில், ஆணையம் கடும் அதிருப்தியையும் பதிவு செய்கிறது. பணியிடத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுக்க கடந்த 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டம் உத்வேகத்துடன் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.  இதன்மூலம் பாதிக்கப்பட்ட பெண்களின் பங்களிப்பு அதிக அளவில் நாட்டுக்கு கிடைத்திடும் வகையில் நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories:

>