×

பாமகவுக்கு இணையாக சீட், எம்பி சீட், பணம் கேட்டு பிடிவாதம்; அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தை திடீர் ரத்து: கூட்டணியில் இருந்து கழற்றிவிட முடிவா?

சென்னை: பாமகவுக்கு இணையாக சீட் கேட்டு பிடிவாதம் பிடிப்பதால், நேற்று மாலை நடைபெற இருந்த அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கழற்றிவிடப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இடம்பெற்ற பாமக, பாஜ, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்து இருந்தார். ஆனால், அதிமுக கட்சியுடன் கூட்டணி சேர ஒவ்வொரு கட்சிகளும் பல நெருக்கடிகளை கொடுத்து வந்தனர்.

வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20 சதவீத இடஒதுக்கீடு தந்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று பாமக நெருக்கடி கொடுத்தது. இதற்கு முதல்வர் பணிந்தார். அதன்படி 10.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக - பாமக இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பாமகவுக்கு 23 இடங்களும், தேர்தல் செலவுக்கு ஒரு பெரிய தொகையும் தருவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்து பாஜவுடன் அதிமுக முன்னணி தலைவர்கள் 4 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. 30 இடங்கள் தர வேண்டும், அதுவும் நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கெடு விதித்து வருகிறார்கள். இதனால் இழுபறி நீடிக்கிறது.

அடுத்தகட்டமாக, தேமுதிகவுடன் அதிமுக அமைச்சர்கள் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. தேமுதிகவுக்கு 10 முதல் 12 இடங்கள் மட்டுமே தருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. இதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. பாமகவுக்கு இணையாக 20 முதல் 23 தொகுதியும், ஒரு மாநிலங்களவை எம்பி பதவி, தேர்தல் செலவுக்கு பெரிய தொகையும் தர வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு அதிமுக தலைவர்கள் சம்மதிக்கவில்லை. அதேநேரம் தேமுதிகவை கூட்டணியில் எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முயற்சி செய்து வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னை, எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் அதிமுக - தேமுதிக தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி வரை தேமுதிக தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் கடைசியாக, அதிமுக தலைவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து தேமுதிக தரப்பில் கேட்டபோது, நேற்று மாலை தேமுதிக கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் பொருளாளர் பிரேமலதா சென்னை, கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, பெரும்பாலான தலைவர்கள் தேமுதிகவுக்கு 20 இடங்களுக்கு குறைவாக தந்தால் அதிமுக கூட்டணியில் சேர வேண்டாம்.

பாமகவுக்கு ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. ஆனால், தேமுதிகவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 37 மாவட்டங்களிலும் செல்வாக்கு உள்ளது. அதனால், நமது கொள்கையை விட்டுக் கொடுக்க வேண்டாம். தேவைப்பட்டால் விஜயகாந்த் கூறியபடி 234 தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டு நமது பலத்தை நிரூபிக்கலாம் என்று ஆவேசமாக கூறியுள்ளனர். அவர்களின் ஆலோசனையை அடுத்தே நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தைக்கு தேமுதிக வரவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், அதிமுகவும் தேமுதிக கேட்கும் தொகுதியை ஒதுக்க தயாராக இல்லை. விஜயகாந்த் அனைத்து மாவட்டத்துக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்தால் அது ஓட்டாக மாறும். தற்போது விஜயகாந்தால் பிரசாரத்துக்கு கூட வர முடியாது.

அப்படி இருக்கும்போது 20 சீட் கொடுப்பது முடியாத காரியம். அதிகப்பட்சமாக 12 சீட் மற்றும் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கலாம். அதை ஏற்றுக்கொண்டு ஓரிரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தி, உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும். இல்லையென்றால் தேமுதிகவை கூட்டணியில் இருந்து கழட்டி விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக முன்னணி தலைவர் ஒருவர் கூறினார்.

Tags : Bamaga ,AIADMK ,Temujin , AIADMK-Temujin talks abruptly canceled: Can it be removed from the alliance?
× RELATED திண்டிவனத்தில் வாக்களித்த ராமதாஸ், அன்புமணி