×

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களின் தொகுதியில் தனியாக வாக்குசாவடி அமைக்க கோரி வழக்கு: ஆணையத்துக்கு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க ஏதுவாக, தனி வாக்குச்சாவடிகளை அறிவிக்கக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்வதிலும் நடைமுறைச் சிக்கல் உள்ளதாக கூறி, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், சம்பந்தப்பட்ட தொகுதியில் அவர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளை அறிவிக்க கோரி  தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், சொந்த தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணி சான்றிதழ் சமர்ப்பித்து வாக்களிக்கவும், பிற தொகுதி அல்லது பிற மாவட்டங்களில் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு கடைசி கட்ட பயிற்சியின்போது வழங்கப்படுகிறது. அந்த வாக்குச் சீட்டில்  அதிகாரிகளின் அத்தாட்சியை பெற வேண்டியுள்ளது. அத்தாட்சி பெற்றாலும் பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டிய காரணத்தினால் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. தபால் வாக்குகள் செலுத்தினாலும், சில நேரங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தான், அந்த வாக்குச்சீட்டுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியை சென்றடைகிறது.

கடந்து 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 ஊழியர்களில், 3 லட்சத்து 97 ஆயிரத்து 697 பேர் தபால் மூலம்  வாக்களித்தனர். இதில் 37 ஆயிரத்து 712 பேர் வாக்குகளை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.வாக்குகளை செலுத்திய 3 லட்சத்து 97 ஆயிரத்து 697  பேரில், 24 ஆயிரத்து 912 பேருடைய வாக்குச்சீட்டுகள் அதிகாரிகளின் அத்தாட்சி இல்லாததால் நிராகரிக்கப்பட்டதன் மூலம் மொத்தமாக 62 ஆயிரத்து 624 பேர் வாக்குகள் வீணாகி விட்டன.தற்போது தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், கொரோனா தொற்று காரணமாக இந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 90,000 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பணிக்கு 6 லட்சம் பேர் அமர்த்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தனி வாக்குச்சாவடிகளை அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்  நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் விடுதலை, வக்கீல் வி.அருண் ஆஜராகினர். அப்போது, மனு குறித்து விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, மார்ச் 8ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

Tags : Commission , Case seeking to set up a separate polling booth in the constituency of those involved in the election process: Response iCourt order to the Commission
× RELATED மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க...