×

ஆசிரியர்கள் சங்கம் விமர்சனம் எதிரொலி: கருத்து வேறுபாடு இருக்கலாம் தவறான பிரசாரம் வேண்டாம்: ஜேஎன்யூ துணைவேந்தர் கண்டனம்

புதுடெல்லி: கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனால் தவறான பிரசாரம் வேண்டாம் என்று ஆசிரியர் சங்கத்தினருக்கு ஜேஎன்யூ துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி ஜேஎன்யூ பல்கலை துணைவேந்தராக எம். ஜெகதீஷ்குமார் உள்ளார். அவரது 5 ஆண்டு பதவிக்காலம் ஜனவரி மாதம் 26ம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தநிலையில் புதிய துணை வேந்தரை நியமிக்கும் வரையில் அந்த பதவியில் நீடிக்கும்படி மத்தியஅரசு கேட்டுக்கொண்டது. இந்தநிலையில் ஜேஎன்யூ ஆசிரியர் சங்கத்தின் ஒரு பகுதி துணைவேந்தர் பதவியில் நீடிக்கும் ஜெகதீஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இதுபற்றி நேற்று ஜெகதீஷ்குமார் விளக்கம் அளித்து கூறியதாவது: பல்கலையில் ஒருகுறிப்பிட்ட ஆசிரியர் சங்க பிரிவினர் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அது பல்கலையின் பெயரை பலவீனப்படுத்திவிடும்.

ஏனெனில் யாராவது ஒருவர் இந்த பல்கலை கடந்த 5 ஆண்டுகளில் முன்னேற்ற பாதையில் செல்லவில்லை என்று கூறினால், இந்த பல்கலையை அழிக்க விரும்பும் நபர்களில் அவரும் ஒருவர் தான். ஆனால் நாம் இப்போது நமது பல்கலையின் மேம்பாட்டிற்காக நிச்சயம் இணைந்து உழைக்க வேண்டும். புதிய துணைவேந்தர் எப்போது நியமிக்கப்படுவார் என்று எனக்கு தெரியாது. ஆனால் துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை நான் பதவியில் நீடிப்பேன் என்பது மட்டும் உறுதி. யாராவது இந்த பல்கலை முன்னேற்றப்பாதையில் செல்லவில்லை என்று கூறினால் அவர்கள் தவறாக கூறுகிறார்கள் என்றுதான் அர்த்தம். அவர்கள் தான் இந்த பல்கலையை அழிக்க விரும்பும் நபர்கள். இப்படிப்பட்ட நபர்கள்தான் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். இன்று நமது பல்கலை அலுவலகத்தில் எந்த பேப்பரும் இல்லை. ஏனெனில் அனைத்தும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுவிட்டது.

அனைத்து நுழைவுத்தேர்வுகளும் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது. நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். நாம் போராட்டத்தை மதிக்கலாம். அனைவரும் தங்கள் கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க அனுமதி உண்டு. ஆனால், தவறான பிரச்சாரங்களை பரப்புவதன் மூலம் நிரந்தரமாக குழப்பத்தை உருவாக்கும் நபர்களுக்கும், ஏதோவொரு விஷயத்தில் தங்கள் கருத்து வேறுபாட்டை உண்மையாக வெளிப்படுத்த விரும்புவோருக்கும் வித்தியாசம் உள்ளது. எனவே இந்த இரண்டையும் நாம் பிரிக்க வேண்டும். இந்த பல்கலைக்கழகம் வாத, விவாதத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் பெயர் பெற்றது, அதை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Teachers Association ,JNU ,Vice-Chancellor , Teachers Association Criticism Echo: Disagreement May Not Be False Propaganda: JNU Vice Chancellor Condemn
× RELATED மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான...