மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்க!: அதிபர் ஜோ பைடன் ஆணை..!!

வாஷிங்டன்: இம்மாத இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் தினசரி தொற்று குறைய தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் வாஷிங்டன் டிசியில் பேசிய அதிபர் ஜோ பைடன், மழலையர் பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் இம்மாத இறுதிக்குள் முதற்கட்ட தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மாநில நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தடுப்பூசி செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன. அவர்களை போல பிற மாநிலங்களுக்கும் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பள்ளி கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி அலுவலக நிர்வாகிகள், குழந்தை பராமரிப்பு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் குறைந்த பட்சம் ஒரு தவணை கொரோனா தடுப்பூசியாவது செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து 100 சதவீத கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க டெக்சாஸ் மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதியையும் டெக்சாஸ் ஆளுநர் தளர்த்தியிருக்கிறார். கொரோனா தொற்று குறைய தொடங்கியிருந்தாலும் கட்டுப்பாடுகளை உடனடியாக தளர்த்துவது ஆபத்து ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 2 கோடியே 93 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பிடித்துள்ள கொரோனா கொல்லுயிரி 5 லட்சத்து 29 ஆயிரத்து 191 உயிர்களை பறித்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>