×

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் செயற்கைக்கோள் படங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், அவற்றின் செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 112 கோடி ரூபாய் செலவில் பெரும்பள்ள ஓடையின் இரு புறமும் சுவர் எழுப்ப தடை கோரி, இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், சுவர் எழுப்பினால் ஓடையின் அகலம் சுருங்கி, அதில் ஓடும் தண்ணீர் ஊருக்குள் புகுவதற்கான அபாயம் உள்ளது. ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்புவது உயர் நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக உள்ளதால், அந்த கட்டுமானங்களை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும்,  ஓடையின் போக்கை மாற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுத்து, மார்ச் 17ம் தேதிக்குள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டனர். மேலும், அந்த புகைப்படங்களின் தொகுப்பை தலைமைச் செயலாளருக்கும், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், பெரும்பள்ள ஓடையில் சுற்றுச்சுவர் கட்டுவதைப் பொறுத்தவரை, நீர்வழிப் பாதையில் குறுக்கீடு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ள கூடாது, நீரோட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி, விசாரணையை தள்ளிவைத்தனர்.



Tags : High Court , Satellite images must be uploaded on the Internet in order to protect water bodies: High Court order to collectors
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...